TVK Vijay Speech: தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்கைக்கான செயலி வெளியிடப்பட்டுள்ளது.
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி வெளியீடு:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் திவிரமடைந்து வருகிறது. அதன்படி, உறுப்பினர் சேர்கைக்காக புதிய செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி பனையூரில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற கட்சி தலைவர் விஜய், “MY TVK” எனும் செயலியை அறிமுகப்படுத்தினார். அதோடு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அடையாள அட்டையையும் வழங்கினார்.
தவெக தலைவர் விஜய் பேச்சு:
தொடர்ந்து விஜய் பேச முற்பட்டபோது கூடியிருந்த நிவாகிகள் லவ் யூ தலைவா என முழக்கமிட, விஜயும் சிரித்தபடி லவ் யூ டூ என பதிலளித்தார். தொடர்ந்து பேசுகையில், “முன்னதாக தமிழ்நாடு அரசியல் நடந்த மிகப்பெரிய தேர்தல்களாக 1967 மற்றும் 1977ம் ஆண்டுகளில் நடைபெற்றவை கருதப்படுகின்றன. அதேமாதிரி தான் 2026ம் ஆண்டு தேர்தலும் அமையப்போகிறது. இதை உறுதியாகவும், ஆரம்பம் முதலே நாம் சொல்லி வருகிறோம். அந்த் இரண்டு மாபெரும் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த அதிகார பலம், அசுர பலம் அனைத்தையும் எதிர்த்து வந்தவர்களெ புதியதாக வந்தவர்கள் வெற்றி பெற்றனர். எப்படி ஜெயித்தார்கள் என பார்த்தால் அது மிகவும் எளிதான விஷயம் தான். ஊருக்கு ஊர்..வீதிக்கு வீதி..வீட்டுக்கு வீடு என சென்று அனைத்து மக்களையும் சந்தித்தனர்.
இனி மக்களோடு தான் இருப்பேன் - விஜய்
அண்ணா அவர்கள் சொன்னது போல் மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு. இதை சரியாக செய்தாலே போதும் ஊருக்கு ஊர்..வீதிக்கு வீதி..வீட்டுக்கு வீடு வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்து நம்மால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும். அதற்காக தான் MY TVK எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதைதொடர்ந்து மதுரை மாநாடு.. மக்கள் சந்திப்பு.. பயணம் என தொடர்ந்து மக்களோடு மக்களாக தான் இருக்கப்போகிறோம். அதற்கான பணிகளை தற்போதிலிருந்தே அனைவரும் தொடங்குங்கள். நாம் இருக்கிறோம், நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் எண்ண வேண்டும். நல்லதே நடக்கும்..வெற்றி நிச்சயம்” என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
தவெக மதுரை மாநாடு:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்றது. அதைதொடர்ந்து இரண்டாவது மாநில மாநாடு, மதுரையில் ஆகஸ்ட் 25ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்த மாநாட்டை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதுமான தனது சுற்றுப்பயணத்திற்கான தேதியை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.