தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந்த விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது. 


சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரனையும் அவரது மனைவி விசாலாட்சியையும் விருதுநகர் முதன்மை நீதிமன்றம் கடந்தாண்டு விடுவித்தது. விருதுநகர் முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அமைச்சருக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்தார்.


சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கங்காபூர்வாலாவின் அனுமதி பெற்று, வழக்கை விசாரிக்க ஆனந்த் வெங்கடேஷ் முன்வந்தாரா என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி 29ஆம் தேதி உத்தரவிட்டது.


இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியை பெற்றே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சருக்கு எதிராக வழக்கை விசாரிக்க முன்வந்தார் என உயர் நீதிமன்ற தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தெரிவித்தார்.


ஆனால், அமைச்சர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, "தானாக முன்வந்து விசாரிக்கும் அதிகாரத்தைபயன்படுத்துவதற்கு முன் அனுமதி பெறப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது" என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்த வழக்கறிஞர் திவேதி, "இது தவறு. அறிக்கையை பாருங்கள்" என்றார்.


இறுதியில் பேசிய நீதிபதிகள், "தானாக முன்வந்து விசாரிக்க விரும்பும் வழக்குகளை தலைமை நீதிபதியே பரிசீலிக்க வேண்டும் என்று கூறுவது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம். இந்த விஷயத்தை அவரோ அல்லது வேறு நீதிபதிக்கு அவர் ஒதுக்கலாம்.


வழக்கின் தகுதியின் அடிப்படையில் விசாரணை தொடரும். அதன்படி உத்தரவு பிறப்பிக்கப்படும். மேற்கண்ட உத்தரவானது, தானாக முன்வந்து விசாரிக்கும் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் மீது கருத்து தெரிவித்ததாகக் கருதக் கூடாது" என்றார்.


இப்படியான நிலையில் இன்று விசாரணைக்கு இந்த வழக்கு வருகின்றது.