ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக கடந்த 27ம் தேதி மேட்ரிட் சென்றார். அதன்பிறகு, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்து திரும்பி இருக்கிறேன். ஸ்பெயின் பயணம் சாதனை பயணமாக அமைந்து இருக்கிறது. ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. ஸ்பெயின் நாட்டில் செயல்படும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்தேன்.


காற்றாலை மின் உற்பத்தி, நீர் மறுசுழற்சியிலும் முன்னணி நிறுவனம் ஆசியானா, ரோக்கா நிறுவனம், ஹபக் லாய்டு நிறுவனம், அபர்ட்டில் நிறுவனம், கெஸ்டாம்ப் நிறுவன நிர்வாகிகளுடன் ஆலோசித்தேன். ரூ. 3440 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 


ஹபக் லாய்டு நிறுவனம் ரூ.2500 கோடி, அபர்ட்டிஸ் நிறுவனம் ரூ.540 கோடி, ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்ய உறுதி. தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் பெருமளவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதுபோன்ற அடுத்த பயணங்கள் திட்டமிடப்படும்” என தெரிவித்தார். 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் பயணம்:


தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், கடந்த ஜனவரி 27ம் தேதி ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சென்றிருந்தனர். தொடர்ந்து, ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்குள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களை சார்ந்த பிரதிநிதிகள், தலைவர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை சந்தித்தார். 


இதையடுத்து, முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுப்பதாக உரையாற்றினார்.


தொடர்ந்து, ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் கார்லோஸ் வெலாஸ்குவேஸ் மற்றும் இந்திய இயக்குநர்  நிர்மல் குமார் ஆகியோரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. 


என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்து..?


அதனை தொடர்ந்து, ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரஃபேல் மேடியோ மற்றும் நீர் பிரிவு முதன்மை செயல் அலுவலர் மானுவல் மஜோன் வில்டா ஆகியோர், தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்வது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசிக்கப்பட்டது. 


மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், உலகளவில் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு (Hapag-Lloyd) நிறுவனம் ரூ.2500 கோடியில் சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.


அதன் பின்னர், ஸ்பெயின் நாட்டின் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதில், ஸ்பெயின் நாட்டின் கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் மேப்ட்ரி ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.