தமிழ்நாடு கேபினட் அமைச்சர்களில் ஒருவராக உள்ளவர் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்  கடந்த 2003ஆம் ஆண்டில் வெளிநாட்டைச் சேர்ந்தவரும் தனது காதலியுமான மார்க்ரெட்டை இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.  இவர்களுக்கு பழனிதேவன் ராஜன் மற்றும் வேல் தியாகராஜன் என இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில் தனது திருமண நாளான இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது திருமண நாளில் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து தனது சமூகவலைதளப் பக்கமான முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”நிலையற்ற தன்மை கொண்ட இவ்வுலகில், இவ்வாழ்வில், பிப்ரவரி 6 , 2003 எனது வாழ்க்கையை, நிரந்தரமாக, மற்றொரு தளத்திற்கு உயர்த்திய நாளாகும். எங்களது திருமண நாளில் வாழ்த்திய அனைத்து கனிவான உள்ளங்களுக்கும் எனது நன்றி” என தெரிவித்துள்ளார். 


 

யார் இந்த பழனிவேல் தியாகராஜன் 





மார்ச் 7ஆம் தேதி, 1966 ஆம் ஆண்டு பிறந்தார் பழனிவேல் தியாகராஜன்.  வேதிப் பொறியியலில் தன் பட்டப்படிப்பைத் திருச்சி என்.ஐ.டியில் படித்த பழனிவேல் தியாகராஜன், தனது  முதுநிலைப் பட்டப்படிப்பை அமெரிக்காவில் படித்தார். தனது படிப்பினை இதோடு நிறுத்தாமல்,  நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தில் பொறியியல் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும் எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்டில் நிதி நிர்வாகத்தில் தனது மற்றொரு முதுநிலைப் பட்டத்தினை படித்தார்.

  


தனது பட்டப் படிப்பையும் முனைவர் ஆராய்ச்சி படிப்பையும் முடித்த பழனிவேல் தியாகராஜன், 1990ஆம் ஆண்டில் செயல்பாடுகள் மற்றும் அமைப்பு மேம்பாடு தொடர்பான தொழிலில் ஈடுபட்டார்.  அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு,  அமெரிக்காவின் மிகப்பெரிய  மற்றும் முக்கிய வங்கித்துறை நிறுவனங்களில் ஒன்றான  லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் கூட்டுச் சேவை மேலாளராக பணியாற்றினார்.  அதன் பின்னர் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் அரசியல் வாழ்வில் ஈடுபடத் தொடங்கினார்.