தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது, அகழாய்வுகள் எல்லாம் தேவையா ? கிடைக்கும் மண்டை ஓடு, எலும்புக் கூடுகளை வைத்து வயிற்று பசியை போக்கிவிட முடியுமா இல்லை கொரோனாவை தான் தமிழ்நாட்டை விட்டு விரட்டிவிட முடியுமா ? தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற பெருமிதங்களால் என்ன பயன் என்று ‘துக்ளக்’ பத்திரிகை விமர்சித்துள்ள நிலையில், இதற்கு சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள், திராவிட இயக்கத்தினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், தமிழ்நாடு தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு-வை காலையிலேயே தொடர்புகொண்டு, அகழாய்வின் முக்கியத்துவம் குறித்தும் விமர்சனங்கள் பற்றியும் கேள்வியை அடுக்கினோம். மதுரைக்கு செல்வதற்காக விமான நிலையம் சென்றுக்கொண்டிருந்த நிலையிலும், நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் அமைதியாகவும், அகழாய்வுகள் மூலம் வெளிவரும் தமிழரின் பண்பாடு பற்றியும் பெருமைபொங்க பதிலளித்தார்.


 


இனி நமது கேள்விகளும் ; அமைச்சரின் பதில்களும் :-


கேள்வி : தமிழ்நாட்டில் அகழாய்வுகள் எங்கெங்கு எல்லாம் மேற்கொள்ளப்படுகின்றன ?


அமைச்சர் தங்கம் தென்னரசு : தமிழ்நாட்டை பொறுத்தவரை தற்போது கீழடி, கொந்தகை, அகரம், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம், கொடுமணல், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை உள்ளிட்ட இடங்களில் எல்லாம் தொடர்ந்து அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


கேள்வி : இந்த அகழாய்வுகளின் முக்கியத்துவம் என்ன ? எதற்காக இந்த அகழாய்வுகள் எல்லாம் நடத்தப்படுகின்றன ?


அமைச்சர் தங்கம் தென்னரசு : இந்த அகழாய்வுகள் மூலம் தமிழின், தமிழரின் தொன்மையை உலகத்திற்கு அறிவிக்கும்புறச்சான்றுகள் கிடைக்கின்றன. தமிழ் மொழியின் தோற்றமும் வளர்ச்சியையும் பற்றிப் பேசும்போது, இது எந்த காலத்தை சேர்ந்தது என்பதை அறிய ஒரு கட்டத்தில் சங்கப்பாடல்கள் மட்டுமே இருந்தது.  சங்கப்பாடல்களுக்கு பிறகு என்று பார்த்தோமேயானால் ’மாங்குலம் கல்வெட்டு’, இந்த மாங்குலம் கல்வெட்டின் காலம் கி.மு 2ஆம் நூற்றாண்டு, இந்த காலத்தை வைத்துதான் தமிழ் பிராமி எழுத்துகள் தோன்றியிருக்கும் என்று ஒரு கணக்கு இருந்தது. ‘புலிமான்கோம்பை கல்வெட்டு’ கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இந்த கால வரையறை இன்னும் முன்னாள் போயிற்று.


ஆனால், இந்த அகழாய்வுகளை நாம் மேற்கொள்ள தொடங்கிய பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.  கீழடிக்கு முன்னாள் நாம் அகழாய்வு செய்த இடங்கள் எல்லாம் புதையிடங்கள். ஆனால், பெரும் அளவில் சங்கக்கால மக்கள் வாழ்ந்த இடங்களை நாம் அகழாய்வு செய்யும்போது, பல முக்கியமான தரவுகள் கிடைத்தன. அதில் மிக முக்கியமானது, நமக்கு கிடைத்த அந்த கரிம படிவங்கள். இந்த கரிம படிமங்களை எடுத்து அனுப்பி பகுப்பாய்வு செய்யும்போது, இதன் காலம் என்பது 6 ஆம் நூற்றாண்டு வரை போனது. இதில் முக்கியம் என்னெவென்றால், இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ’பீட்டா லேபராட்டரி’ இதனை ஆய்வு செய்து உறுதிப்படுத்தியிருக்கிறது.


இதன்பிறகுதான், கீழடியின் காலம் கி.மு 6ஆம் நூற்றாண்டு என்பது தெரிய வந்தது. இவற்றையெல்லாம் போகிற போக்கிலோ, வெறும் பேச்சு மொழியிலோ நாம் சொல்லவில்லை. எல்லாவற்றிற்கும் அறிவியல் ரீதியான சான்றுகள் நம்மிடையே உள்ளன. இதனையொட்டியே தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது.


கேள்வி : இந்த அகழாய்வில் என்ன மாதிரியான புதிய விஷயங்கள் கிடைத்திருக்கின்றன ?


அமைச்சர் தங்கம் தென்னரசு :சங்க காலம் வரலாற்றின் தொடக்க காலம் என நாம் சொல்லிக்கொண்டிருந்தோம். இப்போது இரும்பு காலத்தின் துவக்கத்தின் அருகே நமது ’சிவகளை’ ஆய்வுகள் போகின்றன. மண்பாண்டங்களை தாண்டி, இங்கு கிடைத்திருக்கும் கரிம படிமங்கள் அடுத்தடுத்த தொகுப்பாய்விற்கும் செல்லும்போது இந்த காலம் என்பது இன்னும் கூட முன்னோக்கி போக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக தமிழின் தொன்மை, குறியீடுகளில் இருந்து நாம் வந்தது, பானை ஓடுகளில் கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்து வடிவம் இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது நமது காலம் நாம் கணிக்க முடியாத அளவிற்கு முன்னோக்கி செல்கிறது. இதனையொட்டிதான், சிந்து சமவெளிக்கும் – தமிழ்நாட்டிற்கும் இருக்கக் கூடிய தொடர்புகளை நாம் உணரத் தலைப்பட்டோம்.



மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த கலம்


கேள்வி : சிந்து சமவெளிக்கும் – தமிழ்நாட்டிற்கும் இருக்கக் கூடிய தொடர்புகளை மெய்ப்பிக்கும் வகையில் சமீபத்தில் ஏதேனும் சான்றுகள் கிடைத்துள்ளனவா..?


அமைச்சர் தங்கம் தென்னரசு : வடநாட்டிற்கும் நமக்கும் இருக்கக் கூடிய தொடர்பை உறுதிப்படுத்தும் விதமாக கூட, சமீபத்தில் ஒரு நான்கைந்து நாட்களுக்கு முன்னராக ஒரு ‘முத்திரை நாணயம்’ கிடைத்துள்ளது. இது மவுரியர் காலத்தை சேர்ந்ததாக உள்ளது. கணக்கு பார்த்தோமேயானால் கி.மு மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாக அதனுடைய காலம் இருக்கலாம். இதன்மூலம், அப்போதிலிருந்தே தமிழர்கள் அவர்களுடன் வணிகத் தொடர்களை மேற்கொண்டதை இந்த நாணயம் பறைச்சாற்றுகிறது. இது கங்கை சமவெளிக்கும் – நமக்கும் இருந்த வணிகத் தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்துகிறது.




 


அப்போது பாருங்கள், கிமு மூன்றாம் நூற்றாண்டு காலத்திலேயே வட நாட்டுடன் வணிகம் மேற்கொண்டுள்ளான் தமிழன். என்று பெருமைப்பொங்க சொல்லிவிட்டு, ’கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்,காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என்று பாரதியார் பின்னர் சொன்னார் என சிலாகித்தார்.



கேள்வி : இந்த பொருட்களின் கால நிர்ணயம் எப்படி கணக்கிடப்படுகிறது.. ?


அமைச்சர் தங்கம் தென்னரசு : அகழாய்வுகளில் எவ்வளவு ஆழத்தில் பொருட்கள் கிடைக்கின்றன என்பதை வைத்து அதன் காலம் கணக்கிடப்படுகிறது. கங்கை சமவெளியில் பயன்படுத்தப்பட்ட காசுகள், 146 செ.மீ கீழே கிடைக்கின்றது. இதேபோல, பல இடங்களில் நாணயங்கள் நமக்கு கிடைத்தன.  குறிப்பாக கொடுமணல், அழகன்குளம் பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வுகளிலும் இதேபோன்ற முத்திரை காசுகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. பாண்டியர் காலத்து முத்திரை நாணயங்கள் அங்கு கிடைத்தன. ஆனால், இப்போது கிடைத்திருக்கும் நாணயமோ வடநாட்டில் அச்சிடப்பட்ட நாணயம். இந்த காசுகள் எல்லாம் பரந்த, மிகப்பெரிய ராஜ்ஜியங்களாக இருந்த ‘மகாஜனபாதங்கள்’ காலத்தை ஒட்டியவை. அங்கிருந்து வணிக குழுக்கள் நம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் மூலமே இந்த நாணயம் பயணம் செய்து இங்கு வந்திருக்கின்றது.


வெறும் நாகரிகம் மட்டுமல்ல தமிழர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே செழிப்பான வணிகத்திலும் கோலோச்சி வந்தனர் என்பதை நிரூபணம் செய்கிறது. இந்த முத்திரை காசுகள் தமிழ்நாட்டில் கிடைத்திருப்பதன் மூலம் ஒரு புதிய செய்தியை அது நமக்கு சொல்கிறது.


பொதுவாக அகழாய்வுகள் என்பது ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி நமது பண்பாட்டையும், தொன்மையையும், நமது முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்று கணக்குகளையும் எடுத்துக் காட்டி, அதற்கான தரவுகளை தந்து, தவறான கணக்கீடுகளை சரிசெய்ய பயன்படுகிறது. எனவே அகழாய்வுகள் என்பது மிக மிக முக்கியம்



கிருஷ்ணகிரி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட நீண்டதொரு வாள்


கேள்வி : கடலாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று சொன்னீர்கள் அந்த அறிவிப்பு எந்த நிலையில் இருக்கிறது ?


அமைச்சர் தங்க தென்னரசு : கடல் ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய கடலாய்வு ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்புதல் கேட்டிருக்கிறோம். இருந்தாலும், நிலத்தில் செய்வது மாதிரி கடல் ஆய்வுகள் செய்வது அவ்வளவு எளிதல்ல. கடலின் தன்மை, அதற்கு பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள் மற்றும் ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளை எல்லாம் கணக்கீடு செய்து, ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.


கேள்வி : ஆனால், தமிழ்நாட்டில் நடத்தப்படும் அகழாய்வுகளை பலர் விமர்சனம் செய்கின்றார்களே, இந்த அகழாய்வுகளால் பெரிதாக என்ன கிடைத்துவிடப்போகின்றது என்றெல்லாம் பேசிவருகிறார்களே..?


அமைச்சர் தங்கம் தென்னரசு : சிரிக்கிறார்...  சார், வடக்கத்தி காரர்களில் சில பிரிவினர் தமிழுக்கென்று தனிச்சிறப்பு, வரலாறு கிடையாது, தமிழ் தொன்மையான மொழி இல்லை, அசோகர் காலத்திற்கு பிறகுதான் தமிழ் வந்தது, தமிழுக்கென்று நாகரிகம் கிடையாது, வேத நாகரிகம்தான் தமிழருடைய நாகரிகம்னு நிரூபிக்க போராடுகிறார்கள். ஆனால், அது ஒருபோதும் நடக்காது, அவர்களால் அப்படி நிரூபித்துவிடவும் முடியாது. ஏனென்றால், அவர்களின் கூற்றை மறுப்பதற்கான தரவுகள், அகச்சான்றுகளாக இல்லாமல் அறிவியல் சான்றுகளாக நமக்கு கிடைத்திருக்கின்றன, தொடர்ந்து கிடைத்தும் வருகின்றன அல்லவா அதனை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், பொறுமித்தள்ளுகின்றார்கள்.


கேள்வி : அகழாய்வுகளால் எந்த பயனும் இல்லை கிடைக்கும் பானை ஓடுகளையும், மனித எலும்புகளையும் வைத்து மக்களின் பசியை போக்கிவிட முடியுமா ? கொரோனாவைதான் நாட்டை விட்டு விரட்டிவிட முடியுமா என்றெல்லாம் கடுமையாக துக்ளக் பத்திரிகை விமர்சித்திருக்கிறதே..?


அமைச்சர் தங்கம் தென்னரசு : குஜராத் போன்ற மாநிலங்களில் அகழாய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு ஏராளமான நிதியை ஒதுக்கியதே அப்போதெல்லாம் வயிற்று பசி தீர்ந்துவிட்டதா ? கடலுக்குள் இருக்கும் துவாரகையை நாங்க கண்டுபிடிக்க போறோம், அதுக்கு நிதி ஒதுக்குறோம் என்றேல்லாம் சொன்னாங்களே அப்போது வயிற்று பசி தீர்ந்துவிட்டதா இல்லை கொரோனாதான் ஒன்றுமில்லாமல் போய்விட்டதா ? அவரவர்கள் அவர்களது பண்பாட்டின் வேர்களை தேட வேண்டாமா ? அது என்னவென கொண்டு வந்து உலகிற்கு நிரூபிக்க வேண்டாமா ? தங்களது தொன்மையை அறிந்துகொள்ள வேண்டாமா ?


இன்னும் ஒரு படி மேலே போய் சொன்னால், போன ஆட்சியில ‘பாரத பண்பாடு’ என சொன்னபோது சந்தோஷமாக கைக்கொண்டி சிரித்து, அகம் மகிழ்ந்தவர்கள்தான், இன்று தமிழ் பண்பாடு என்று சொல்லும்போது அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாமல் மண்டை ஓடு வருகிறது, எலும்புக் கூடு கிடைக்கிறது என்கிறார்கள். பாரத பண்பாடு என்றால் இனிக்கிறது, தமிழர் பண்பாடு என்றால் கசக்கிறதா..? தமிழ் பண்பாட்டின் தொன்மையை அவர்களால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. எரிகிறது அவ்வளவுதான்.  இதையே மத்திய அரசு செய்யும்போது ‘கம்னு’ இருந்தாங்க, தமிழ்நாடு அரசு செய்யும்போது ஊர கூட்றாங்க.


கேள்வி : அகழாய்வுகள் தேவையில்லை என்றெல்லாம் விமர்சனம் வரும் நிலையில், வரக்கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரில் அகழாய்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா..?


அமைச்சர் தங்கம் தென்னரசு : நிச்சயமாக, புதிய அகழாய்வுகள் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார். இது தொடர்பாக அதிகாரிகள், அறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.