நோய் எதிர்ப்புக் கிருமிகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.சி.எம்.ஆர். நடத்திய செரோ-கண்காணிப்பு ஆய்வில், தமிழகத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று தெரியவதுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்தியாவின் 70 மாவட்டங்களில் அண்மையில் தேசிய செரோ ஆய்வை மேற்கொண்டது. தேசிய அளவிலான நோய்த்தொற்று பரவல் குறித்த தரவுகள் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில், மாநிலங்கள் அளவிலான  ஆய்வு முடிவுகளை ஐசிஎம்ஆர் நேற்று வெளியிட்டது. 


ஆய்வின் முடிவில், " அதிகாரப்பூர்வ கோவிட்-19 பரவல் எண்ணிக்கையை விட 33 மடங்கு வரை அதிக பாதிப்புகள் இந்தியாவில் ஏற்பட்டிருக்கலாம். பீகார் மாநிலத்தில் 134 மடங்காகவும், உத்தர பிரதேச மாநிலத்தில் 100 மடங்காகவும், தமிழகத்தில் 25 மடங்காகவும், கேரளாவில் 6 மடங்காகவும் உண்மையான பாதிப்புகள் இருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதாவது, தமிழ்நாட்டில் சராசரியாக 25 கொரோனா நோயாளிகளில் ஒருவர் மட்டுமே அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளனர். எனவே, தமிழ்நாட்டில் ஏற்கனவே 5 கோடிக்கும் (மொத்த மக்கள்தொகையில் 65%) அதிகமானோர் (அதிகாரப்பூர்வ எண்ணிக்கை * 25 மடங்கு) கொரோனா  தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்புக் கிருமிகளை கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் மேலும் 3 கோடி மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. 


 


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் “பரிசோதித்தல், தடம் அறிதல், சிகிச்சை அளித்தல்” என்ற உத்தி  மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில்,  இதுவரை சுமார் 3.6 (3,61,00,234) கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . அன்றாட சோதனைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதால், இதுவரை மொத்தம் 3,69,71,334 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போது, மாநிலத்தில்  மொத்தம் 279 ஆய்வுக் கூடங்கள் உள்ளன. 69 ஆய்வுக்கூடங்கள் அரசுப் பிரிவிலும், 210 தனியார் ஆய்வுக் கூடங்களும் உள்ளன.  




தமிழ்நாட்டில் நிகழ்நேர RT PCR அடிப்படையிலான பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. கேரளா மாநிலத்தின் மொத்த பரிசோதனை எண்ணிக்கையில், 35% மட்டுமே RT PCR அடிப்படையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேசியளவில் RT PCR சோதனையின் விழுக்காடு 48% ஆக உள்ளது.


கேரளாவை விட தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மக்கள் தொகைக்கு ஏற்ப (Relative to Population) தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. உதாரணமாக, 10 லட்சம் மக்கள் தொகையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை கேரளா, டெல்லி, கர்நாடகவை  ஆகிய மாநிலங்களை விட தமிழகத்தில் குறைந்து காணப்படுகிறது.      


மேலும், மாநிலத்தின் அநேக கொரோனா பரிசோதனைகள் சென்னை, கோயம்பத்தூர், திருச்சி போன்ற நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. கிராமப்புற மாவட்டங்களில் கூடுதலான மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. 


மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்:  உள்ளூர் அளவில் பொது சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு அவசியமான செரோ பரவல் ஆய்வுகளை, மாவட்ட அளவிலான தரவுகளை உருவாக்குவதற்கு  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் ஆலோசித்து மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர்/ முதன்மைச் செயலாளர்/ சுகாதார செயலாளர்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட 4-வது கட்ட தேசிய செரோ பரவல் ஆய்வுகளின் முடிவுகளை மேற்கோள்காட்டி, நிலையான நெறிமுறைகளை இதுபோன்ற ஆய்வுகளில் மேற்கொண்டு, கோவிட்-19 தொற்றுக்கு எதிராக ஆதாரங்களின் அடிப்படையிலான பொது மருத்துவ நடவடிக்கையை வெளிப்படையாக மேற்கொள்வதற்கு, சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த ஆய்வுகளின் முடிவுகளை பயன்படுத்துவதற்கு ஏதுவாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் ஆலோசித்து இந்த ஆய்வுகளை தங்களது மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.