உடற்பயிற்சி செய்த போது காலில் அடிபட்டதால் நடிகர் கார்த்திக் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


1980 மற்றும் 1990களில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் நடிகர் கார்த்திக். முத்துராமனின் மகனான கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலம் அறிமுகமானார். 


முன்னணி கதாநாயகனாக வலம் வந்த கார்த்திக், அக்னி நட்சத்திரம், கிழக்கு வாசல், பொன்னுமணி, வருஷம் பதினாறு, மெளன ராகம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களையும் கொடுத்தார். தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். வில்லன் கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கிறார். இந்நிலையில் வீட்டில் உடற்பயிற்சி செய்த போது கார்த்திக்குக்கு காலில் அடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் கார்த்திக் உடற்பயிற்சி செய்துள்ளார். 




அப்போது கீழே தடுமாறி விழுந்ததில் அவரது காலில் அடிபட்டுள்ளது. வலியால் துடித்த கார்த்திக்கை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டதால் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் இப்போது அடிப்பட்டுள்ளதாகவும், எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் கார்த்திக்குக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் ஓய்வில் உள்ளார். கார்த்திக் தற்போது தீ இவன், அந்தகன் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.


Mukeshs Methil Devika Divorce: 64 வயதில் விவாகரத்து: 2வது மனைவியை பிரியும் பிரபல நடிகர்..!


இது குறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ள நடிகர் சங்கம், 'நவரச நாயகன் கார்த்திக் உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுந்ததில் காலில் அடிபட்டுள்ளது. காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்த காலில் மீண்டும் அடிபட்டதால் எலும்பில் சிறிது விரிசல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்சமயம் அவர் ஓய்வெடுத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளனர்.


நடிகர் கார்த்திக்கின் மகன்களில் ஒருவரான கவுதம் கார்த்திக்கும் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் கடல் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். பின்னர் என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன், இருட்டு அறையில் முரட்டுக்குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.