கரூரில் தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 




 
இக்கூட்டத்தில் பேசிய  மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூரில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில்  சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் முதல்வராக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கரூர் மாவட்டத்தில் கொசுவலை உற்பத்தி, ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சிறந்து விளங்கி வருகிறது. ஜவுளி ஏற்றுமதியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான சாயப்பூங்கா பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது கடந்த கால ஆட்சியில் இப்பிரச்சனை கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரச்சனைக்கு அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது. விரைவில் கரூரில் சாயப்பூங்கா அமைக்கப்படும். 




கரூர் ஜவுளி ஏற்றுமதி தொழில் வளர்ச்சி அடைய வெளிநாட்டு ஏற்றுமதி முகவர்கள் (பையர்கள்) அதிக அளவில் வரவேண்டும். கரூரில் விமான வசதி இல்லாததால் பையர் வரவு குறைவாக உள்ளது. எனவே, முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி கரூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் தமிழகம் 100 சதவீத வளர்ச்சி பெற்ற மாநிலமாக திகழும் என்பதில் மாற்றம் இல்லை என்றார்.




கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது: - தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 26 ஆயிரம் என தொடங்கி 38 ஆயிரமாக உயர்ந்து வந்த நிலையில் தமிழக முதல்வரின் சிறப்பான நடவடிக்கையால் இன்று தொற்று எண்ணிக்கை 2000 ஆக குறைந்துள்ளது. இது உலக சாதனை. 




ஒவ்வொரு துறைகளிலும் என்ன குறைகள் உள்ளது என்பதை ஆய்வு செய்து அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதியாளர்கள்  கோரிக்கையை ஏற்று கரூரில் விரைவில் சாய பூங்கா நிச்சயம் தொடங்கப்படும் என்றார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞரை மிஞ்சும் அளவிற்கு அரசியல் நடத்தி வருகிறார். நாட்டில் தொழில்துறை நன்றாக இருந்தால் தான் வேலை வாய்ப்பு கொடுக்க முடியும். திமுக ஆட்சியில் தொழில்துறை மிகுந்த வளர்ச்சி அடையும் என்பதில் மாற்றமில்லை என்றார். 




நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜவுளி உற்பத்தி பூங்காவின் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சிவகாமி சுந்தரி, குளித்தலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இளங்கோ மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.