ஆறு, கடல், ஏரி என நீரோட்டங்களின் கரைகளில் இருக்கும் ஊர்களுக்கு அதன் மீன்வாசம்தான் அடையாளம். துரதிர்ஷ்டவசமாக எண்ணூர் அதன் தொழிற்சாலை ரசாயன நாற்றங்களுடன் தான் நம்மை வரவேற்கிறது. இத்தனைக்கும் கொசஸ்தலை ஆறு, எண்ணூர் சிறுகுடா, வங்களா விரிகுடா என மூன்றுபக்கமும் நீரால் சூழப்பட்ட தீபகற்பம் இந்தப் பகுதி. ஆனால் எல் அண்ட் டி, அனல் மின் நிலையம், அசோக் லைலேண்ட் எனச் சக்கரவியூகம் போலச் சூழ்ந்திருக்கும் தொழிற்சாலைகளால் இத்தனை நீரோட்டங்களும் நீர்த்தேக்கங்களாக மாறி இந்தத் தேக்கங்களிலும் கழிவுகள் சூழ்ந்து கிடக்கிறது இந்த ஊர்.  




மீன்பிடிகாலத்தை விடத் தங்கள் நீரில் ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்த மக்கள் போராடிய காலமே அதிகம். கொரோனா முதல் அலைகாலத்தில்தான் அதானி துறைமுக ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடினார்கள் இந்த மக்கள். இன்னும் அதற்கே தீர்வு கிடைக்காத சூழலில் தற்போது தமிழ்நாடு அரசு மின்பகிர்மானக் கழகத்தின் ஆக்கிரமிப்புப் பிரச்னை தலைதூக்கியிருக்கிறது. எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நிலக்கரி கன்வேயர் பெல்ட்டை அமைக்கக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது மின்பகிர்மானக் கழகம். இதற்காக கடல்மணலையும் நிலக்கரிச் சாம்பலையும் ஆற்றின் குறுக்கே கொட்டி பணிகளை முடுக்கியுள்ளது அரசு.






ஆனால் இந்த கட்டுமானம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அங்கீகரித்த நில அளவை மீறி செய்யப்படுவதாகச் சொல்கின்றனர் பகுதி மக்கள். ஆனால் அனைத்தும் சட்டப்படிதான் நடப்பதாக அறிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. 




’நாலு படகு ஒன்னா போகற பாதையில இப்போ ஒரு படகு போகவே திணறுற அளவுக்கு மணல் கொட்டி வைச்சிருக்காங்க. இதுக்குப் பேர் ஆக்கிரமிப்பு இல்லாம வேற என்ன?’ எனக் கோபம் கொப்பளிக்கக் கேள்வி எழுப்புகிறார் எண்ணூர் காட்டுக்குப்பம் கிராம வாசியான ராஜேஸ்வரி. ஆற்றின் அலையாத்திப் பகுதியில் மணல் மேடு போலக் கொட்டப்பட்டிருக்கும் பகுதிக்கே நம்மை அழைத்துச் சென்று காண்பித்தார் அவர். மணல் கொட்டப்பட்டிருப்பதால் சிறிய கட்டுமரப் படகு ஒன்று திரும்புவதற்குத் திணறிக் கொண்டிருந்தது. கால் முடங்கிப்போன தனது கணவனைக் காப்பாற்ற இந்த ஆற்றில் இறால், நண்டு பிடித்துப் பிழைப்பை ஓட்டுகிறார் ஐம்பத்து ஐந்து வயதான ராஜேஸ்வரி. 




காட்டுக்குப்பம் கிராம மூத்தாளில் ஒருவரான அன்னம் தனது அப்பாவோடு கரையோரம் அமர்ந்து இறால் பிடித்த கதையைச் சொன்னார்.’நான் இதே ஆத்துல கரையோரம் உட்கார்ந்து இறால் பிடிச்சிருக்கேன்.ஆத்துல கையவிட்டு மணல் அள்ளியிருக்கேன். இப்போ கரையோரம் நாற்றமும் கழிவும்தான் கிடக்கு. அதுல அஞ்சு நிமிஷம் நின்னாக்க அரிப்பு வந்துரும். அந்த இடத்துல மீன் வளராது, இறால் தங்காது. ஆத்து உள்ள கொஞ்ச தூரம் படகு ஓட்டிப்போய்தான் இறால் பிடிக்கனும். அப்படி ஓட்டிப்போறப் பாதையிலையும் அரசாங்கம் கைய வைச்சா நாங்க என்ன செய்ய?’ எனக் கேட்கிறார்.   


இந்தப் பகுதிப் பெண்களுக்கு இறால், நண்டு பிடிப்பதுதான் பொருளாதாரம். வெள்ளை இறால், மொட்ட இறால், புலி இறால், சேற்று இறால், சிவப்பு இறால் என வணிக ரீதியாக மதிப்பு வாய்ந்த ஐந்து இறால்கள் தற்போது மணல், சாம்பல் கொட்டப்பட்டிருக்கும் இந்த அலையாத்திப் பகுதியில்தான் கிடைக்கின்றன. நல்ல மீன் கிடைக்க வேண்டும் என்றால் இந்த அலையாத்தியைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்புகளில்தான் மீனவர்கள்  அடப்பு வலை அல்லது கைவலை போட்டு மீன் பிடிக்கிறார்கள். தற்போது தங்களது பிழைப்பில் மணலை அள்ளிக் கொட்டியுள்ளது அரசு என்கிறார்கள் இவர்கள். மற்றொருபக்கம் அனல் மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகளைக் கொட்டி நீர் பாதிக்கப்படுவதால் விஷத்தன்மை வாய்ந்த இறால்களும் தற்போது இந்த நீரில் பெருகத் தொடங்கியுள்ளன. அற்றின் இரண்டு கரையோரமும் முகடுகள் போலக் கொட்டிக்கிடக்கும் சாம்பலை நமக்குக் காண்பிக்கிறார் காட்டுக்குப்பம் கிராம நிர்வாகிகளில் ஒருவரான ரகுராமன்.



’எண்ணூர் சுற்றுப்பட்டு 24 கிராமத்துக்கும் இந்த ஆற்றில் இறால் பாடுகள் இருக்கு.ஒவ்வொரு கிராமத்து மக்களும் முறைபோட்டு இறால் பிடிப்பார்கள். இதுல இரண்டு பாடுகள் மணல் கொட்டுறதால பாதிக்கப்படுது. இதுல இறால் பிடிக்கவே நாங்க இந்தக் கருப்புத் தண்ணியில சாம்பலுக்கு நடுவுல நின்னுதான் பிடிக்கனும். இதையும் ஆக்கிரமிச்சிட்டா எங்க வாழ்வாதாரமே போயிடும். ஆயிரம்தான் எங்க பிள்ளைங்க படிச்சாலும் வேலை கிடைக்கலைனா இந்த மீன் பிடிதொழிலுக்குதான் வராங்க. இந்த தண்ணி விஷம்னு தெரிஞ்சே எங்கப் பிள்ளைகளை நாங்க எப்படி இறக்கிவிட முடியும்?’ என்கிறார் அவர்.




TANGEDCOவின் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுபவர்களில் எட்டாம் வகுப்புப் படிக்கும் சிறுவன் லத்தீஷும் ஒருவன். ’பள்ளிக்கூடப் பாடம் படிக்காம போராட்டத்துல என்ன செய்யறிங்க?’ எனக் கேட்டோம். ‘என் அப்பா மீன் பிடிக்கப் போவாரு. என் அப்பா பிரச்னை எங்க குடும்பத்தோட பிரச்னைதானே. எங்க அப்பா மீன் பிடிச்சுட்டு வந்தாதானே நாங்க சாப்பிட முடியும் பள்ளிக்கூடம் போய் படிக்க முடியும். அதான் நானும் போராட்டத்துல இருக்கேன்’ எனத் மிகத்தெளிவான பதில் அந்தச் சிறுவனிடமிருந்து வந்தது.


ஆக்கிரமிப்பு நடந்துள்ளதா இல்லையா என விசாரணை நடத்தப்படும் என்று பகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார் அந்த ஊர் தாசில்தார். முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்னும் விசாரணைதான் இது. இந்த மக்களின் கோரிக்கை எல்லாம் ஒன்றுதான் ஆற்றைச் சுத்தப்படுத்த வேண்டும், அடுத்த தலைமுறைக்காவது அன்னம் அம்மா போல ஆற்றில் கைவிட்டு மணல் அள்ளும் வாழ்க்கை வாய்க்க வேண்டும் என்பதுதான்.