நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டம் நடைபெற்று வருகின்றன. தினமும் காலை மாநிலங்களவை கூட்டமும், மாலை மக்களவை கூட்டமும் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் கடந்த 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது மாநிலங்களவை மற்றும் மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம், தனிநபர் மசோதா தாக்கல் போன்ற வழக்கமான நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. அந்தவகையில் தருமபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார் நேற்று ஒரு தனி நபர் மசோதா ஒன்றை மக்களவியில் தாக்கல் செய்துள்ளார். அதன்படி இந்து திருமணம் சட்டம் 1955 சட்டத்தை திருத்தும் வகையில் ஒரு மசோதாவை அவர் தாக்கல் செய்துள்ளார். இந்து திருமண சட்டத்தில் புதிதாக பிரிவு 7ல் சுயமரியாதை திருமணத்தை அங்கரிக்க வேண்டும் என்று இந்த மசோதாவில் கூறியுள்ளார். மேலும் இந்தியா முழுவதும் சுயமரியாதை திருமணம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்றும் இந்த மசோதாவில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தனிநபர் மசோதாவை கொண்டு வருவதற்கான காரணங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இந்தியாவில் தற்போது இந்து திருமண சட்டம் 1955ன்படி புரோகிதர் வைத்து அல்லது முறையான இந்து பாரம்பரியங்களை வைத்து செய்யும் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த 1967ஆம் ஆண்டே இந்து திருமண சட்டம் திருத்தப்பட்டது. அதில் புரோகிதர் இல்லாத சுயமரியாதை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலிருந்து இந்த வகை திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சுயமரியாதை திருமணங்கள் மூலம் ஆண் ஆதிக்க திருமண முறைகள் எதுவும் பெண் மீது திணிக்கப்படாது. ஆகவே இந்த வகை திருமணங்களின் மூலம் சமத்துவம் மற்றும் பெண்களின் மான்பு பாதுகாக்கப்படுகிறது. இந்த வகை திருமணங்கள் மூலம் பெண் சமத்துவம், கலப்பு திருமணங்கள் மற்றும் விதவை திருமணம் ஆகியவை எளிதாக நடைபெறும். எனவே இந்த வகை திருமணம் இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: சுங்கச்சாவடியில் குறையாத வேகம்.. லாரியில் மோதி நொறுங்கிய மின்னல் வேக கார் - வீடியோ!