விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எங்கியார் குப்பத்தில் விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மக்கள் உயிரிழப்புக்கு காரணமாக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனக் கூறினார்.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் மீனவர் கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி விஷ சாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 13 பேர் உயிரிழந்தனர். தற்போது விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இவர்களை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி:


டாஸ்மாக்கை படிப்படியாக குறைப்போம் என சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறார்கள். டாஸ்மாக் மூலம் மட்டும் 44 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது இதனை 52 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க இலக்கு என அரசு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லை. எல்லோரும் மது அருந்த வேண்டும் என அரசு நினைக்கிறது இதனால் தான் இன்று மூலை முடுக்கெல்லாம் அது விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முழு பொறுப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள்.


மேலும் இந்த துறை அமைச்சர் ஓடி ஒளிந்து கொண்டுள்ளார். மது விற்பனையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் என ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன். இந்த அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க தகுதியற்ற அரசு. மக்கள் உயிரை காக்க தவறவிட்ட இந்த அரசு 22 பேரின் இறப்புக்கு காரணமாக இருக்கக் கூடிய இந்த அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க கூடாது. முக.ஸ்டாலின் பதவி விலக வேண்டும், இதேபோன்று அமைச்சர் செந்தில் பாலாஜியும் பதவி விலக வேண்டும். கள்ளச்சார உயிரிழப்பு ஒரு அரசியல் சதி என்றும், மத்திய அரசு விசாரித்தால் தான் இதில் உள்ள சதி வெளிப்படும் என தெரிவித்தார்.