வரும் 21ஆம் தேதி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார். நாட்டின் முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்த உள்ளார்.

Continues below advertisement

தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி:

நாளை மறுநாள் நடைபெறும் கர்நாடக முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். இதற்காக, அவர் கர்நாடக தலைநகர் பெங்களுருவுக்கு செல்கிறார். அதை முடித்து கொண்டு, அடுத்த நாள், தமிழ்நாட்டுக்கு செல்லும் ராகுல் காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில்  மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

கர்நாடகாவில் முதலமைச்சரை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தவித்து வந்தனர். இறுதியாக, தொடர் பேச்சுவார்த்தையின் பலனாக சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. துணை முதலமைச்சர் பதவி கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமாருக்கு வழங்கப்பட உள்ளது. முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

கடந்தாண்டு, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி, ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர், தனது தந்தையின் நினைவிடத்தில் 20 நிமிடங்கள் தியானம் மேற்கொண்ட அவர் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

இதையடுத்து, நினைவிட வளாகத்துக்குள் அரச மரக்கன்று ஒன்றையும் நட்டார். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வகையில் தரை விரிப்பு விரிக்கப்பட்டு இருந்தது.

இதையொட்டி நினைவிட வளாகத்தில் வீணை காயத்ரியின் வீணை இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் சர்வமத பாடல்கள், தேசபக்தி பாடல்கள் ஆகியவை இசைக்கப்பட்டன. அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் ராகுல் காந்தி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ராஜீவ் காந்தி படுகொலை:

கடந்த 1991ஆம் ஆண்டு, மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குத் மக்களவை தேர்தல் பிரசாரத்துக்காக வந்தார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. அப்போது அவர்மீது மனித வெடிகுண்டுத் தாக்குதல்  நடத்தப்பட்டதில் அவர் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில்  நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் முக்கியக் குற்றவாளிகளாகக் கைதுசெய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்தனர். பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ஏழு  பேரும் கடந்தாண்டு விடுதலை செய்யப்பட்டனர்.