தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதால், கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம். முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறையை திரும்பப் பெறவில்லை. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி அணிய வேண்டும்” என தெரிவித்திருக்கிறார். இதனால் மக்கள் கவனமுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கொரோனா பரவலை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் தினசரி 25 கீழ் பதிவாகி வந்த கொரோனா தொற்று, தற்போது 30 க்கு மேலாக பதிவாகி வருகிறது. இதையடுத்து, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. அதன் பிறகு படிப்படியாக கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சுழற்சி முறையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது பொதுத்தேர்வுகள் நடத்த அட்டவணையும் வெளியிடப்பட இருக்கிறது.
இந்தநிலையில், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் தலைத்தூக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்