நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயார் என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.


பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராத நிலையில், அவரை சந்தித்து பேசுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயார் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது முழுக்க அரசியல் சாசனம் தொடர்பான விவகாரம் தேர்நீர் அருந்தி கேக் சாப்பிடுவதன் மூலம் தீர்க்கக் கூடியது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


தமிழ்நாடு அரசின் வழக்கு:


தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றதில் இருந்தே, அவருக்கும் அரசுக்கும் இடையேயான உறவு என்பது ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. இதற்கு உதாரணமாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ரவி நீண்டகாலமாக ஒப்புதல் வழங்காமல் இருப்பதை கூறலாம். இதையடுத்து தான் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்தமனு விசாரணைக்கு வந்த போது, ஆளுநருக்கு எதிராக நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.


உச்சநீதிமன்ற கருத்தும்:


கடைசியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது,”சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் அளுநரே தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். தமிழ்நாடு ஆளுநருக்கும், முதலமைச்சருருக்கும் இடையே தீர்க்கப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆளுநர் முதலமைச்சருடன் அமர்ந்து இதைத் தீர்த்தால் நாங்கள் பாராட்டுவோம். ஆளுநர் முதலமைச்சரை அழைத்து பேசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறோம்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். அதன் விளைவாக தான் மசோதாக்கள் தொடர்பாக் ஆலோசனை நடத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.