வளவனாற்றில் வெங்காய தாமரைகளை அகற்றாமல் கடல் முகத் துவாரத்தில் திறந்து விட்டதால் 15 கிராமங்களில் மீன்பிடி தொழில் பாதிப்படைந்துள்ளது. 300க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

திருவாரூர் மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயம். அதிலும் நெல் சாகுபடி பணிகளில் அதிகமாக விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக செயல்படவும் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை நம்பி அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தொண்டியக்காடு நுணாங்காடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் மீன்பிடித் தொழிலை நம்பி மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் இவர்களின் தொழில் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும் இந்த காலத்தில் தமிழக அரசு மீன் பிடி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வரும். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை  ஒட்டிய தொண்டியக்காடு, முணாங்காடு, கரையங்காடு உள்பட 15 கிராமங்கள் மீன்பிடித் தொழிலை நம்பி உள்ளன. இந்த கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட விசை படகுகள் மூலமாக 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலுக்கு வளவனாற்றின் வழியாக சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் உள்ள அனைத்து ஆறு மற்றும் வாய்க்கால்களிலும் வெங்காய தாமரை மண்டி கிடந்த நிலையில் அதனை ஆங்காங்கே அகற்றி அப்புறப்படுத்தாமல், வளவனாற்றில் திறந்து விட்டனர்.



 

அந்த வெங்காய தாமரையானது சமீபத்தில் பெய்த மழை காரணமாக முழுமையாக அடித்துக் கொண்டு வந்து வளவனாற்றின்  கடல் முகத்துவாரப் பகுதிக்கு வந்துவிட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக படகு மூலமாக கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலை நம்பி தொண்டியக்காடு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் சுமார் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேரடியாக மனு அளித்த நிலையில் மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக நேரடியாக பார்வையிட வந்த போது அதிகாரிகள் சரியான இடத்தை காட்டாமல் மாவட்ட ஆட்சியரை திசை திருப்பி அழைத்துச் சென்று விட்டனர். மேலும் கடல் முகத்துவாரத்தை முழுமையாக தூர்வாரி சுத்தப்படுத்துவதற்கு சுமார் 10 கோடி ரூபாய்க்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திட்டம் அறிவித்த நிலையில் இதுவரை அதற்கான பூர்வாங்க பணிகளும் தொடங்கப்படவில்லை.



 

எனவே மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு 15 கிராமங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கடல் முகத்துவாரத்தில் தேங்கியுள்ள வெங்காய தாமரைகளை அகற்றி படகுகள் எளிதாக கடலுக்குள் சென்றுவர உரிய ஏற்பாடுகளை செய்வதோடு கடல் முகத்துவாரத்தை தூர்வாரும் திட்டத்தை உடனடியாக செய்திட வேண்டுமென அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.