சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு சென்றடைய செய்யவும் இந்த கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. 


மேலும் இயற்கை பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து பணியாற்றி மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தவும் இந்த கண்காணிப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


திருப்பத்தூர், திண்டுக்கல், சென்னை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, நாமக்கல், நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 




திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விஜயராஜ் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திற்கு பிரஜேந்திர நவ்னித் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 
சென்னைக்கு ஜெயஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 
திருவண்ணாமலைக்கு மதுமதி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
தூத்துக்குடிக்கு வீர ராகவ ராவ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
திருப்பூர் மாவட்டத்திற்கு வள்ளலார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 




கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
புதுக்கோட்டைக்கு சுந்தரவள்ளி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
நாமக்கல் மாவட்டத்திற்கு அசியா மரியம் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று முன் தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 270க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன என்று இதுவரை தகவல் தெரியவில்லை. மூன்றாவது நாளாக இன்றும் மீட்பு பணி தொடர்ந்து வருகிறது. 


இதனிடையே கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கோரிக்கையை தொடர்ந்து கேரளாவிற்கு பலரும் உதவிகரம் நீட்டி வருகின்றனர். இன்று எதிக்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வயநாட்டிற்கு செல்ல உள்ளனர். 


வயநாடு பேரிடர் குறித்து ஏற்கெனவே மத்திய அரசு மாநிலத்திற்கு அறிவுறுத்தியதாகவும் அதை காதுகொடுத்து கேட்கவில்லை எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் பழி போட்டு தப்பிக்க நேரம் இது இல்லை என பினராயி விஜயன் பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


தென் மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளில் நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தகுந்த மாவட்டங்களை அலர்ட் செய்ய தமிழக அரசு இந்த கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.