திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மறுசூரைச் சேர்ந்தவர் சுரேஷ் இவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க இந்தியன் வங்கிக்கு கடந்த 24-ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது வங்கி முன்பாக இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் அந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்று விட்டார். இது குறித்து ஆரணி நகர காவல்துறையினரிடம் சுரேஷ் புகார் அளித்துள்ளார் . அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதேபோல் களம்பூர் அடுத்த எட்டவாடியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் அவர்களது இரு சக்கர வாகனத்தை கூட்ரோடு அருகே நிறுத்திச் சென்றுள்ளார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்று உள்ளார். இது குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் களம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சேத்துப்பட்டு பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு
மேலும் இதே போன்று சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை பேருந்து நிலையம் அருகில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இது குறித்து பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில், ஆய்வாளர் விநாயகமூர்த்தி, துணை ஆய்வாளர் சுந்தரேசன் ,சங்கர், ஆனந்தன் ஆகியோர் காமராஜர் சிலை அருகில் வாகன சோதனையில் நேற்று மாலை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் மடக்கி விசாரணை செய்தனர். அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இருசக்கர வாகனத்தை திருடிய திருடன் கைது
அதனை தொடர்ந்து அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாதுரை சேர்ந்த தனுஷ் என்கிற வீரா வயது (23) என்பதும் ஆரணி, களம்பூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் 3 இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்துள்ளது. தனுஷ் கொடுத்த தகவலின் பெயரில் தேடப்பட்ட மூன்று இரு சக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதோடு மட்டுமின்றி தனுஷ் மீது சென்னை, விழுப்புரம், சேத்துப்பட்டு உட்பட பல காவல் நிலையங்களில் வழிப்பறி, இரு சக்கர வாகன திருட்டு மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தனுஷை ஆரணி நகர காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஆரணி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.