தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் சந்தித்தார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு குறித்தும், நீட் தேர்வு குறித்து பேசினார்.
இதனையடுத்து டெல்லி சென்ற ஆளுநர் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துவிட்டு வந்தார். இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு அரசியல் நிலவரம் உள்ளிட்டவைகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. ஆளுநரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
டெல்லி பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய ஆளுநர் தலைமை செயலாளர் இறையன்புவிடம், நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அரசு துறை செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசு துறை செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்கான காலம் பின்னர் அறிவிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த சுற்றறிக்கை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“ஆட்டுக்கு தாடி எதற்கு மாநிலத்திற்கு ஆளுநர் எதற்கு” என்று முழங்கியவர் பேரறிஞர் அண்ணா. அவர் உருவாக்கிய கட்சி ஆட்சியில் இருக்கும்போது ஆளுநருக்கு எதற்காக அரசின் நலத்திட்டங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்ற கேள்வி எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த அதிமுக ஆட்சியில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் செய்த ஆய்வுக்கு திமுக தரப்பிலிருந்து காத்திரமான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. அந்த எதிர்ப்பு தற்போது எங்கே சென்றுவிட்டது.
முக்கியமாக மாநில சுயாட்சி என்பது திமுகவின் அடிநாத கொள்கைகளில் ஒன்று. தற்போது நலத்திட்டங்கள் குறித்த அறிக்கையை ஆளுநருக்கு தாக்கல் செய்தால் அது மாநில சுயாட்சியை அடகு வைப்பதற்கு சமம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ், “அதிமுக ஆட்சியில் ஆளுநரின் ஆய்வுக்கு தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஆளுநருக்கு வரவேற்பு கம்பளம் விரித்தபோது தமிழ்நாடு மக்கள் கைகொட்டி சிரித்தார்கள். எந்த அதிகாரியும் ஆளுநரை சென்று சந்திக்கக்கூடாது என்று ஜெயலலிதா கட்டளையிட்டவர்.
இது ஜெயலலிதாவின் ஆட்சியும் இல்லை, எடப்பாடி ஆட்சியும் இல்லை. அரசியல் சாசன சட்டம் ஆளுநருக்கு கொடுத்திருக்கும் உரிமையை ஸ்டாலின் மதிப்பார். அதேசமயம் ஆளுநரின் அதிகாரம் வரம்பு மீறினால் பழனிசாமி போல் பயப்படக்கூடியவரும் இல்லை”என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்