புதுச்சேரி வாணரப்பேட்டை தாவீதுபேட் பகுதியை சேர்ந்தவர் ரவி என்கிற பாம் ரவி (வயது 33). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலைகள், 7 வெடிகுண்டு வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதற்காக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரவி  ஜாமீனில் வெளியே வந்து இருந்தார்.  இந்த நிலையில் நேற்றுமுன்தினம்  வாணரப்பேட்டை முருகசாமி நகர் நேரு வீதியை சேர்ந்த கண்டிராக்டர் அந்தோணி (28) என்பவருடன் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ரவி வெளியே புறப்பட்டார்.  அப்போது பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வழிமறித்து வெடிகுண்டு வீசி இருவரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர்.




பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றியும் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர். இதில், கடந்த ஆகஸ்டு மாதம் புதுவை நூறடி சாலையில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் புகுந்து கத்தி முனையில் ரூ.4 லட்சம் பறித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வாணரப்பேட்டை ரவுடிகளான வினோத், தீன் ஆகியோர் துண்டுதலின்பேரில் இந்த கொலை நடந்து இருப்பது தெரியவந்தது.



ரவி, அந்தோணி கொலைக்கு வாணரப்பேட்டை ரமணி, பிரகாஷ் (35), சந்துரு (20), நவீன் (21), சதீஷ் (20), அரவிந்த் (21) ஆகியோர் பணம், வாகனம் கொடுத்து உதவியதும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து அவர்களை தேடி வந்தநிலையில் வாணரப்பேட்டை பாழடைந்த ரெயில்வே குடியிருப்பில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அவர்களை பிடித்து கைது செய்தனர். இவர்களில் ரமணி சிறையில் உள்ள ரவுடி வினோத்தின் தாயார் ஆவார். கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.


அதாவது, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திப்புராயப்பேட்டையை சேர்ந்த திப்லான் கடத்திச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டார். ரவுடியாக இருந்த அவர், திருமணத்துக்குப் பின் மனைவி, குழந்தையுடன் திருந்தி வாழ்ந்தது பிடிக்காமல் அவரது பழைய கூட்டாளிகளே கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலையில் தற்போது கொலை செய்யப்பட்ட ரவுடி ரவிக்கு தொடர்பு இருப்பதாக திப்லானின் ஆதரவாளர்கள் கருதினர். இந்தநிலையில் திப்லானின் பிறந்தநாளன்று கல்லறைக்கு சென்று அவரது குழந்தையின் கையில் அரிவாளை கொடுத்து கேக் வெட்டி கொண்டாடினர். அதோடு பழிக்குப்பழி வாங்கவும் சபதம் எடுத்தனர்.



பாம் ரவியை கொலை செய்தால் அதற்கான வழக்கு செலவுக்கு தேவை என நூறடி சாலையில் சூதாட்ட விடுதியில் புகுந்து வினோத்தும், தீனும் ரூ.4 லட்சத்து 30 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். இதுதொடர்பாக கைதாகி 2 பேரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே எதிரிகளால் அச்சுறுத்தல் இருந்து வந்தநிலையில் பாம் ரவி நயினார் மண்டபம் பகுதியில் வசித்து வந்தார்.


கடந்த சில மாதங்களாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வாணரப்பேட்டையில் முகாமிட்டு சாலைகளை சீரமைத்தல், கழிவுநீர் வாய்க்காலை தூர்வாருதல் உள்ளிட்ட பொது சேவையில் ரவி ஈடுபட்டு வந்தார். இது சிறையில் இருந்து வரும் வினோத், தீன் ஆகியோருக்கு மேலும் அவர் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதன் உச்சகட்டமாக சிறையில் இருந்தபடி வினோத், தீன் ஆகியோர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி கடந்த சில நாட்களாக அவர்களது கூட்டாளிகள் பாம் ரவியை கண்காணித்து வந்துள்ளனர். 



இந்தநிலையில் தங்களது கூட்டாளிகளான எரிக், ரோமார்க், அருண் என்கிற கருடன், பேட்ரிக், தினேஷ் மற்றும் கூலிப்படையினரை வைத்து பாம் ரவி, அவரது கூட்டாளியான அந்தோணியுடன் வந்த போது நேற்று முன்தினம் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இவர்களில் எரிக், ரோமார்க் ஆகியோர் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட திப்லானின் சகோதரர்கள் ஆவார்கள். போலீசாரால் தேடப்படும் இவர்கள், காஞ்சீபுரத்தில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.