மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு இன்றுவரை நீராதாரமாக திகழ்கிறது முல்லை பெரியாறு அணை.


1876ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் கடுமையான பஞ்சம் நிலவ, இனி வரும் காலங்களில் பருவமழை பொய்த்து போனால் நீர் நிலைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அணைகள் கட்டுவதில் ஆங்கிலேயர்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர். அதன் விளைவாக முல்லை பெரியாறு 1887லிருந்து 1895ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அணை கட்டப்பட்டது.


கல்லணையின் தொழில்நுட்பம்


இந்த அணையானது சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கட்டப்பட்டது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை, தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான, கரிகால சோழன் கட்டிய கல்லணையை ஆய்வு செய்த ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் அதனை, the great anacut என்று குறிப்பிட்டார். காட்டனின் அறிக்கையை படித்த பென்னிகுவிக், கல்லணையை கட்ட பயன்படுத்திய முறையையே முல்லை பெரியாறு அணை கட்டுவதற்கு பயன்படுத்த முடிவெடுத்தார். அதன்படி முல்லை பெரியாறு அணையும் கட்டப்பட்டது.


பென்னிகுவிக் தனது அனைத்து சொத்துக்களையும் விற்றே இந்த அணையை கட்டினார். அதனால் இன்றுவரை தேனி மாவட்டத்தில் அவரை தெய்வமாக மதிக்கின்றனர் மக்கள்.


அணை கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கு சொந்தமாக இருந்தாலும் இதனை தமிழ்நாடு பொதுப்பணித்துறை பராமரித்துவருகிறது. இதன் மொத்த கொள்ளளவு 15.5 டிஎம்சி ஆகும். உயரம் 155 அடி.


அணையும், சர்ச்சையும்


குஜராத் மோர்பி நகரத்தின் மச்சு அணை1979ஆம் ஆண்டு உடைந்து லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததால், முல்லைப் பெரியாறு அணை அருகே நிலநடுக்கம் ஏற்பட்டால் அணை உடையும் அபாயம் இருக்கிறது அதனால் அதன் உயரத்தை குறைக்க வேண்டும் என கேரளா கூறியது.


இதனையடுத்து, மத்திய நீர் ஆணையம் 1979ஆம் ஆண்டு அணையை ஆய்வு செய்து பெரியாறு அணையின் உயரத்தை குறைத்து மராமத்து பணிகள் செய்ய உத்தரவிட்டது.


அதன்படியே 152 அடியிலிருந்து 142 அடியாகவும் பின்னர் 136 அடியாக அணையின் உயரம் குறைக்கப்பட்டு மராமத்து பணிகள் தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டன. ஆனால் மராமத்து பணிகள் முடிவடைந்த பிறகு அணையின் உயரத்தை அதிகரிக்க கேரளா எதிர்ப்பு தெரிவித்தது.


தொடர்ந்து, அணையின் உயரத்தை உயர்த்த அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 142 அடியாக அணையின் உயரத்தை உயர்த்திக்கொள்ளவும், அணையை வலுப்படுத்திய பிறகு முழு கொள்ளளவான 152 அடிக்கு உயர்த்திக்கொள்ளலாம் என உத்தரவிட்டது.


இந்த உத்தரவால் தமிழ்நாடு உற்சாகமடைந்தது. ஆனால் அந்த உற்சாகத்திற்கு இடைஞ்சலாக கேரள அரசு அந்த மாநில சட்டப்பேரவையில் புதிய அணை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த முடியாது என கைவிரித்தது.


அணையும் வழக்கும்


இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை 2010ஆம் ஆண்டு அமைத்தது.


அணையை ஆய்வு செய்த அந்தக் குழு அணை பாதுகாப்பாக இருக்கிறது. எந்தவித ஆபத்தும் இல்லை என 2012ஆம் ஆண்டு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. 2013ஆம் ஆண்டு இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று இறுதி தீர்ப்பை வழங்கியது.


ஆனால் இதற்கு கேரளா தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. 2018ஆம் ஆண்டு முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம், மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுக்கும் விதமாக துணைக்குழு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்படி பெரியாறு அணையின் பாதுகாப்பு துணைக்குழுவை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இந்தத் துணைக்குழுவை கலைக்க வேண்டுமென கேரளாவைச் சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.


அதன்படி மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் அணையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த அறிக்கை தவறானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  “கேரளாவில் கடுமையான மழை பெய்வதால் அணையில் நீர் நிரம்பிவருகிறது. எனவே முல்லை பெரியாறு அணையில் 137 அடிவரை மட்டுமே நீரை தேக்க உத்தரவிட வேண்டும்” என மனுதாரர் தரப்பு கோரியது.


இதனையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில், “முல்லை பெரியாறில் 137 கன அடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. பாதுகாப்பு கருதி அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டது.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில அரசுகளிடம் சரியா ஒருங்கிணைப்பு இல்லை என கண்டனம் தெரிவித்தனர்.


மேலும், “தற்போதைய அவசர சூழலை கருத்தில்கொண்டும், பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகள் சார்ந்த விஷயம் என்பதாலும் இவ்விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். அதேநேரம் பெரியாறு அணையில் நீர்தேக்கம் தொடர்பாக நாங்களாக எந்த முடிவும் எடுக்க முடியாது. கேரள அரசு தரப்பில் கனமழை, வெள்ளம் தொடர்பாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதனையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.


அணையில் அதிகபட்சமாக எவ்வளவு கன அடி நீரை தேக்க முடியும் என்பது குறித்து இருமாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து, அங்குள்ள சூழலைக் கண்காணித்து அணைப் பாதுகாப்பு கண்காணிப்புக் குழு விரைந்து முடிவெடுத்து இதுதொடர்பான விரிவான அறிக்கையை அக்டோபர் 27 (நாளை) தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண