தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பேருந்து மூலம் பயணிப்பவர்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 


நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இப்பண்டிகை வரும் நிலையில் கடைவீதிகளில் பட்டாசு வாங்கவும், புத்தாடைகள் எடுக்கவும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் மீண்டும் வெளியூர் திரும்புவதற்கு வசதியாக நவம்பர் 13 ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார்கள். 


இதனிடையே தமிழ்நாடு அரசு சார்பில் கிட்டதட்ட நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் வழக்கமாக வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் சேர்த்து சுமார் 10,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிட்டதட்ட 80 ஆயிரம் முன்பதிவுகள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் ரயில்கள், ஆம்னி பஸ்களில் டிக்கெட்டுகள் முடிவடைந்து விட்டது. மேலும் சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் ஊர் திரும்ப நவம்பர் 13, 14,15 ஆகிய தேதிகளில் மொத்தம் 6 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. 


சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு, தாம்பரம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி பைபாஸ், மாதவரம், கே.கே.நகர் ஆகிய இடங்களில் பயணிகளின் வசதிக்காக பேருந்துகள் பிரித்து விடப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், பேருந்து மூலம் பயணிப்பவர்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் “அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா உதவி மைய எண் 1800 599 1500" என்ற 11 இலக்க எண் கடந்த மார்ச் 9 ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு தற்போது உபயோகத்தில் இருந்து வருகிறது.


பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த 11 இலக்க உதவி மைய எண்ணை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என்று பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், நாளை (நவம்பர் 10) முதல் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக கட்டணமில்லா மூன்று இலக்க உதவி மைய எண் 149 அறிமுகப்படுத்தப்படுகிறது.மேற்படி மூன்று இலக்க புதிய உதவி மைய எண் 149-ஐ தொடர்பு கொண்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க: Omni Bus Fare: ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை: கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்கும் மர்மம் என்ன?- அன்புமணி கேள்வி