சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு,  சுறா மீன்களின் துடுப்புகளை, கடத்த முயன்ற  பயணியை, சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை. மருத்துவ குணமுடைய ரூ. 12 லட்சம் மதிப்புடைய 24 கிலோ சுறா மீன்கள் துடுப்புகளை, உரிய ஆவணங்கள் இன்றி, சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற சென்னை பயணியிடம், சுங்கத்துறை தீவிர விசாரணை.  


மத்திய தொழில் பாதுகாப்பு படை


சென்னை (Chennai News): சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று செவ்வாய் நள்ளிரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை, பாதுகாப்பு சோதனை பகுதியில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.


சர்வதேச மதிப்பு சுமார் ரூ.12 லட்சம்


அப்போது சென்னையை சேர்ந்த மகேந்திரன் (59) என்பவர், சுற்றுலா பயணிகள் விசாவில், சிங்கப்பூர் செல்வதற்காக வந்திருந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவரை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவருடைய உடமைகளை சோதனையிட்டனர் . அவருடைய உடமைக்குள் இருந்த பெரிய பார்சல்களில், சுறா மீன்களின் துடுப்புகள் (Shark Fin) மொத்தம் 24 கிலோ இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.12 லட்சம். ஆனால் அதை வெளிநாட்டிற்கு கொண்டு செல்வதற்கான முறையான ஆவணங்கள் எதுவும், பயணி மகேந்திரனிடம்  இல்லை.




சுறா மீன்கள் துடுப்பு


இந்த சுறா மீன்களின் துடுப்புகள், மருத்துவ குணம் உடையவை.அ தோடு  வெளிநாடுகளில் உயர்ரக நட்சத்திர ஹோட்டல்கள், பெரிய விருந்து நிகழ்ச்சிகளில், சுறா மீன் துடுப்பு சூப்புகள், மிகவும் பிரபலமானவை. மேலும் சுறா மீன்கள் துடுப்புகளை பயன்படுத்தி, உயிர் காக்கும் மருந்துகளும் தயாரிப்பதாக கூறப்படுகிறது. எனவே சுறா மீன்கள் துடுப்புகளை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல, கடல் வாழ் உயிரினங்கள் பராமரிப்பு மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு துறையிடம் உரிய  அனுமதி பெற வேண்டும்.


சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தனர்


இல்லாமல் இதை வெளிநாட்டுக்கு கொண்டு செல்வது, தண்டனைக்குரிய குற்றமாகும். இதை அடுத்து மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள் அந்த பயணியின், சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவரிடம் இருந்த சுறா மீன்கள் துடுப்பு பார்சல்களை கைப்பற்றினர்.


 




மேலும் பயணி மகேந்திரனையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சுறா மீன்களின் துடுப்புகளையும், மேல் நடவடிக்கைக்காக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


வன உயிரின பாதுகாப்பு குற்ற பிரிவு போலீசுக்கு தகவல் 


விமான நிலைய சுங்க அதிகாரிகள் பயணி மகேந்திரனை கைது செய்து, இந்த சுறா மீன்களின் துடுப்புகளை யாரிடம் இருந்து வாங்கினார்? சிங்கப்பூரில் யாரிடம் கொடுப்பதற்காக எடுத்து சொல்கிறார்? என்று விசாரணை நடத்துகின்றனர். அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள வன உயிரின பாதுகாப்பு குற்ற பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.