தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.


கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று காலை 11.30 மணிக்கு வெளியிட்டார். 120 பக்கங்களைக் கொண்ட வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தாக்கல் செய்தார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்த நிலையில் திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது. வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மேலும், கடன் விவரங்கள், குடிநீர், மின்வாரியம், போக்குவரத்து துறையின் வரவு - செலவு மற்றும் வருவாய் இழப்புக்கான காரணங்கள் உள்ளிட்டவை வெள்ளையறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2001இல் அதிமுக ஆட்சியில் பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் பொன்னையன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


வெள்ளை அறிக்கை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், “வெள்ளை அறிக்கை தொடர்பாக ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கைகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. இது பலரின் உதவியால் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றாலும், இதில் ஏதாவது தவறு இருந்தால் அதற்கு நான் மட்டுமே முழு பொறுப்பு. வேறு யாரும் அதற்கு பொறுப்பல்ல. தற்போது வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை, செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின் அரசு இணையத்தில் வெளியிடப்படும். கடன் நிலை என்ன, வருமானம் எப்படி மாறியுள்ளது, செலவீனம் எப்படி மாறியுள்ளது என மூன்று உள்ளது. முக்கிய பொதுநிறுவனமான மின்வாரியம், மெட்ரோ வரியத்தின் நிலை என்ன என்பதும் இதில் உள்ளது. வருமானம் இல்லாத அரசு செலவீனத்தை குறைக்க முடியாது. வருமானம் சரிந்து போயுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இதை குறிப்பிட்டுள்ளது. வருவாய் 3.16 சதவீதம் வரை குறைந்து வருகிறது. திமுக ஆட்சியில் 2006-11 உபரி வருமானம் முதல் இரண்டு வருடம் மட்டுமே பற்றாக்குறை இருந்தது. 2011 ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 17 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.






முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இருந்ததை விட கடைசி 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பொது சந்தா கடன் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 லட்சம் உள்ளது” என்றார்







வெள்ளை அறிக்கையும் எதிர்க்கட்சிகளும்


உலகம் முழுவதும் ஆளும்கட்சிகளை திணறடிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தையாக வெள்ளை அறிக்கை என்ற சொல் உள்ளது. அரசின் நடவடிக்கை குறித்து பேட்டி அளிக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக ’’ஒரு வெள்ளை அறிக்கை’யை வெளியிட வேண்டும் என்று பேசுவதை நாம் பலமுறை கேட்டிருப்போம்.


அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என கடந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வெள்ளை அறிக்கை மட்டும் போதுமா? அல்லது அதனுடன் சேர்ந்து பச்சை, மஞ்சள் அறிக்கையுடன் வெள்ளரிக்காயும் சேர்த்து கொடுப்போம் என தெரிவித்திருந்ததை அவ்வுளவு விரைவில் மறந்திருக்க முடியாது. வெள்ளை அறிக்கைக்கு பின்னால் இருக்கும் வரலாற்றை சற்றே நாம் திரும்பி பார்ப்போம்.


வெள்ளை அறிக்கை என்றால் என்ன?



வெள்ளை அறிக்கை என்ற பெயர் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். வெள்ளை அறிக்கை என்பது ஒரு ஜனநாயக கருவி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளை அறிக்கையை அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் வெளியிட முடியாது.


வெள்ளை அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றியோ அல்லது பிரச்னைகள் பற்றியோ முழுமையாக தெரிவிக்கும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இந்த ஆவணத்தில் குறிப்பிட்ட சிக்கல் குறித்தோ அல்லது பொருள் குறித்தோ நிபுணரின் தீர்வும் பரிந்துரையும் கொண்டதாக இருக்கும். ஒரு சிக்கலை புரிந்து கொள்ளவோ, சிக்கலை தீர்க்கவோ, அல்லது முடிவெடுக்கவோ வெள்ளை அறிக்கை வழிவகை செய்கிறது


இந்த ஆவணத்தின் வெளிப்புற பக்கங்கள் வெள்ளை நிறத்தால் இருக்கும் என்பதால் இதற்கு வெள்ளை அறிக்கை என பெயர் வந்தது.




வெள்ளை அறிக்கை எப்படி இருக்க வேண்டும்


வெள்ளை அறிக்கையில் பேசப்படும் பொருள் குறித்த விளக்கங்கள் தரவு வாரியாகவும் புள்ளி விவரங்களை எளிமையான தொனியில் விளக்கும் விதமாகவும் இருக்க வேண்டியது அவசியம்


வெள்ளை அறிக்கை குறிப்பிடும் பிரச்னைகள் மீது அரசாங்கம் எடுத்திருந்த எல்லா நடவடிக்கைகளின் பட்டியல்களும் அதில் இடம் பெற்றிருத்தல் வேண்டும்


தொடர்புடைய ஒரு பிரச்னையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அதிகாரப்பூர்வ விளக்கமாக இருக்கும், வெள்ளை அறிக்கை வெளியிட்ட அமைப்பின் தெளிவான குறிக்கோளை மக்கள் அறிந்து கொண்டு விவாதிக்கவோ, ஆலோசிக்கவோ முடியும்.


வெள்ளை அறிக்கை மக்களிடையே அரசின் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க உதவுகிறது. வெள்ளை அறிக்கை ஒரு பிரச்னைக்கு தீர்வாக அல்லது புதிய திட்டத்தை அறிமுகம் செய்வதற்காக வெளியிடப்படுகிறது.


பச்சை அறிக்கை


வெள்ளை அறிக்கையை போலவே பச்சை அறிக்கை என்ற பதமும் வழக்கத்தில் உள்ளது ஒரு பொருள் தொடர்பாகவோ அல்லது ஒரு பிரச்னைகள் தொடர்பாகவோ தீர்வை உண்டாக்க இறுதி முடிவு எடுக்கப்படாத பல்வேறு நபர்களின் ஆலோசனைகளை கொண்ட தொகுப்புக்கு பச்சை அறிக்கை என்று அழைக்கப்படுகிறது.