பள்ளி மாணவர்களுக்கு எமிஸ் ஐ.டி.யைப் பதிவுசெய்ய புதிய வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதைப் பின்பற்றியே தலைமை ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு EMIS ID வழங்கப்படுகிறது. மாணவர்கள் தொடர்பான அனைத்து தரவுகளும் EMIS ID அடிப்படையிலேயே சேகரிக்கப்படுகிறது. அதனால் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஒரே EMIS ID-ஐ பராமரிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் ஒரே மாணவருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட EMIS ஐடிக்கள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பள்ளி மாறிப் படிக்கும்போது இந்தக் குழப்பங்கள் ஏற்படுகின்றன.
இதனை தவிர்க்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் சில வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
புதிய EMIS ID
முதன்முறையாக பள்ளியில் சேர்க்கப்படும் (LKG அல்லது ஒன்றாம் வகுப்பு) மாணவர்களுக்கு மட்டுமே புதிய மாணவர் சேர்க்கைப் படிவத்தில் EMIS பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவ்வாறு பூர்த்தி செய்தபின் சார்ந்த மாணவருக்கு EMIS ID உருவாக்கப்படும். UKG அல்லது 1 ஆம் வகுப்பில் மற்றொரு பள்ளியில் சேர்க்கும்பட்சத்தில் ஏற்கெனவே EMIS ID உள்ளதா என்பதை, சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் உறுதிசெய்த பின்னரே புதிய EMIS ID வழங்குதல் வேண்டும்.
பள்ளியில் சேரும் அனைத்து மாணவருக்கும் மாணவர் பெயர், பெற்றோர் விவரம் மற்றும் பிறந்தநாள் ஆகியவற்றுடன் மாணவரின் EMIS ID ஐ குறிப்பிட்டு சேர்க்கைச் சான்றிதழ் (Admission Certificate) தலைமையாசிரியர் EMIS தளத்தல் இருந்து பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும். இந்தச் சான்றிதழை பெற்றோர் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் EMIS ID தெரியாமல் போவதை தவிர்க்கலாம்.
பெற்றோரின் தொலைபேசிக்கு ஓ.டி.பி.
எதிர்காலத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் இருப்பின் பெற்றோரின் தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும். OTP பயன்படுத்தி மட்டுமே மாற்றங்கள் மேற்கொள்ள இயலும். எனவே மாணவர் விவரப் படிவத்தில் உரிய முறையில் விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பள்ளி மாற்றம் செய்யும் மாணவரின் EMIS ID தெரியவில்லை எனில் பெற்றோர் தொலைபேசி எண் மணவர் பிறந்த நாள் முன்னார் படித்த பள்ளியின் விரைம் ஆகியவற்றை உள்ளீடு செய்து அந்த மாணவரின் EMIS ID ஐகண்டறிய வேண்டும். 2ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை வேறு பள்ளிகளில் மாணவர் பள்ளிமாற்றம் செய்து சேரும்போது புதிய EMIS ID உருவாக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மாணவர்களுடைய பள்ளியின் விவரம் மற்றும் EMIS ID ஆகியவற்றை புதியதாக பள்ளியின் சேரும் மாணவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக (iSMS) அனுப்பப்படும்.
மாணவர்களின் பள்ளி மாறுதலின்போது, அவர்களின் விவரம் பொதுத் தரவு தளத்தில் (Common Pool) இல்லையெனில் மாணவர் சேரவிருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் மாணவர் ஏற்கெளயே பயின்ற பள்ளியின் தலைமையாசிரியருக்கு EMIS தளத்தில் கோரிக்கை அனுப்புதன் (Raise Request) வழக்கத்தில் உள்ளது. அவ்வாறு அனுப்பும்போது பெற்றோரின் தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அந்த OTPயிணை பெற்றோரிடமிருந்து பெற்று மாணவரின் சேர்க்கையினை மேற்கொள்ளுதல் வேண்டும்.
மாற்றுச் சான்றிதழ் அவசியம்
புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கான மாற்றுச் சான்றிதழை இணைத்தல் வேண்டும். அச்சான்றிதழ் இல்லாத பட்சத்தில் வேறு ஏதாவது சான்றுகள் (ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் இன்னும் பிற) இருப்பின் அதனை இணைத்தல் வேண்டும். இவ்விவரங்களை உள்ளீடு செய்து புதிய EMIS IDஐ உருவாக்கிக் கொள்ளலாம்’’.
இவ்வாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.