சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டியை கொன்று நகை மற்றும் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். வயதானவர்களை குறிவைத்து  கொலை செய்து கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். 


மூதாட்டி கொடூர கொலை:


நங்கநல்லூர் தில்லைகங்கா நகரை சேர்ந்தவர் 81 வயதான சிவகாமசுந்தரி. மகன் ஸ்ரீராம் வேலைக்கு சென்றிருந்த நிலையில் கடந்த 21-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த மர்ம நபர் அவரை கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 45 சவரன் தங்க நகைகள் மற்றும் பீரோவை உடைத்து அதில்  இருந்த ரூ.2 லட்சத்தையும் கொள்ளையடித்துச் சென்றார். கொலை குறித்து விசாரிக்க உதவி ஆணையர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 


அவர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவியில் முகம் பதியாதபடி வந்த நபர் ஒருவர் நீல நிறமுடைய குடையை பிடித்தபடி மூதாட்டியின் வீட்டினுள் சென்று பின் வெளியே வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி உள்ள இடங்களில் எல்லம் குடையை வைத்து முகத்தை மறைத்தபடி அந்த நபர் சென்று வந்ததும் தெரிய வந்தது. 


தீவிர விசாரணை:


போலீசார், கொலை நடந்த இடத்தில் இருந்து அந்நபர்  மாறி மாறி பயணித்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்த நபர் கே.கே.நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்த சக்திவேல் என்பது தெரிய வந்தது. அசோக் நகர் போலீசார் நேற்று மதியம் அவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் தான் ஆடைகளுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்ததாகவும், சரியான வேலை இல்லதாதால் கடனாளி ஆனதாகவும் தெரிவித்தார். 


வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் வறுமையில் தவித்து வந்ததாகவும், இதனால் திருட முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். குடும்ப வறுமையை போக்க திருட முடிவு செய்து வீட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளை குறிவைத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்ததாகவும் தெரிவித்தார். 


கொலையாளி கைது:


சம்பவத்தன்று தில்லைகங்காநகர் முதாட்டி வீட்டிற்கு சென்று அவர் தனியாக இருப்பதை உறுதி செய்த பின் அவரிடம் தண்ணீர் வாங்கி குடிப்பது போல் நடித்து அவர் மூக்கை பொத்தியுள்ளார். பின் தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகளை  திருடியதாக வாக்கு மூலம் அளித்தார்.


இதே போன்று கடந்த 2021-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நகர் பாரதிதாசன் நகரை சேர்ந்த சீதா லட்சுமியை கொலை செய்து 15 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றதாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதனையடுத்து சக்திவேலிடம் இருந்து 45 சவரன் நகைகள் , ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை மீட்டனர். பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலை நடந்த 48 மணி நேரத்திற்குள் கொலையாளி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.