சமூக வலைதளங்களில் அவ்வப்போது காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து சில புகார்கள் மற்றும் விமர்சனங்களும் எழும். அந்தவகையில் தற்போது ஒரு புகார் எழுந்துள்ளது. காவலர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெண் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
இது தொடர்பாக அப்பெண், “நேற்று ஈசிஆரின் ஷீ ஷேல் பகுதியில் பணியில் இருந்த காவலரின் செயல் மிகவும் மோசமானதாக அமைந்தது. நேற்று அலுவலக நேரத்திற்கு பிறகு நானும் என்னுடைய நண்பரும் கடற்கரையில் அமர்ந்திருந்தோம். எங்களுக்கு கடற்கரைக்கு செல்ல நேரம் இருப்பது தெரியாது.
அதற்காக அங்கு பணியிலிருந்த காவலர் எங்களிடம் ஒரு தீவிரவாதியிடம் நடந்து கொள்வதை போல் நடந்து கொண்டிருந்தார். அத்துடன் அவர் நீங்கள் இது போன்று வட இந்தியாவில் 10 மணிக்கு மேல் சுற்றுங்கள் என்று கூறினார். தமிழ் பேச தெரியாது என்பதற்காக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த நான் எப்படி வட இந்தியராக இருப்பேனா? அவருக்கு நான் பதிலளித்த பிறகு அவர் என்னை காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்வேன் என்று மிரட்டினார். கடற்கரைக்கு செல்லும் நேரம் எதுவும் அங்கே நோட்டீஸாக ஒட்டப்படவில்லை. முதலில் எப்படி மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று காவலர்களுக்கு கற்று கொடுங்கள். அவர் அப்படி என்னிடம் நடந்து கொள்ள நான் ஒன்றும் குற்றவாளி அல்ல” எனப் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்தப் பதிவிற்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஒரு பதிவை செய்துள்ளார். அவர் தமிழ்நாடு காவல்துறையினர் பக்கத்தின் மூலம் இந்தப் பதில் பதிவை செய்துள்ளார். அதில், “உங்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்