2018ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவானது. இந்தப் படத்தில் கதிர் மற்றும் ஆனந்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் கதிரின் தந்தை கதாபாத்திரத்தில் நாட்டுப்புற கலைஞர் எம்.தங்கராசு நடித்திருந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரு மின்சார வசதியில்லாத வீடு ஒன்றில் வசித்து வந்தார். 


 


இவருடைய நடிப்பை பார்த்த பிறகு தமிழ்நாடு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தினர் இவரை சென்று நேரில் பார்த்தனர். அப்போது இவருடைய வீட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதன்காரணமாக அந்தச் சங்கம் மற்றும் பரியேறும் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் இவருக்கு வீட்டை பெற்று தரவேண்டும் என்று கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் வைத்தனர். தன்னுடைய 17 வயது முதல் நாட்டுப்புற இசை நடன கலைஞராக இருந்து வருகிறார் தங்கராசு. 




இவருடைய நிலையை அறிந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இவருக்கு உரிய இடத்தில் வீடு வழங்கப்படும் என்று கூறினார். அதன்பின்னர் தமிழ்நாடு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர் சங்கம், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோரின் முயற்சியால் நேற்று தங்கராசுவிற்கு வீடு வழங்கப்பட்டது. அவர் நேற்று தன்னுடைய குடும்பத்துடன் அந்த வீட்டில் குடியேறினார். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் இருந்தனர். 


 


இந்த வீடு தொடர்பாக தங்கராசு, “நான் என்னுடைய 17 வயது முதல் கலை பயணத்தை தொடங்கினேன். தற்போது எனக்கு 65 வயதாகிறது. என்னுடைய மகளின் நலன் கருதி வேறு சில வேலைகளை செய்து வருகிறேன். தற்போது என்னுடைய மகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஒரு தற்காலிக வேலை ஒன்றை வாங்கி தந்துள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் சில நல்லவர்களின் உதவி என்னுடைய மகள் நல்ல பாதையை எட்ட உறுதுணையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண