தமிழகத்தில் ஒரே நாளில் 2,743 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை தினசரி ஆயிரத்தை கடந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், விதிகளை பின்பற்றாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் புதிதாக 2,743 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை 34,90,834 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17,717 ஆக உயர்ந்துள்ளது. 1791 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 34,35,090 பேர் குணமடைந்துள்ளனர். இன்று உயிரிழப்புகள் ஏதுவும் ஏற்படவில்லை.
அதிகப்பட்சமாக சென்னையில் 1062 பேருக்கும், செங்கல்பட்டில் 403 பேருக்கும், திருவள்ளூர் 169 பேருக்கும், கோவையில் 127 பேருக்கும், திருச்சியில் 113 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்