அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.


ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், கட்சி விதிப்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட அதிகாரமுள்ளதாகவும், வேறு எவருக்கும் அந்த அதிகாரம் இல்லை என்பதால், 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுவில், பொதுக்குழுவை கூட்ட 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும், அந்த விதிகள் பின்பற்றப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.


இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுக தெரிவித்துள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி,  வேறு என்ன நிவாரணம் கோரியிருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியதற்கு, பொதுக்குழுவுக்கு தடை தான் கோரப்பட்டுள்ளது எனவும், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாகவும் பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.


உச்ச நீதிமன்ற உத்தரவை நாளை தாக்கல் செய்கிறோம். வழக்கை நாளைக்கு தள்ளிவைக்க வேண்டும் எனவும் கோரினார். உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென நீதிமன்றத்தை நிர்பந்திக்க முடியாது  என நீதிபதி தெரிவித்தார். மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் கோரிக்கை வைத்தார். மேலும், கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றம் உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை பிற்பகல் 2:15க்கு ஒத்திவைத்தார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண