கொரோனா பரவலின் இரண்டாம் அலை தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 723 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகி உள்ளது, இதில் 6533 ஆண்கள் மற்றும் 4190 பெணகள் அடங்குவர். தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றின் அளவு 3000-ஐக் கடந்துள்ளது. இன்று ஒரேநாளில் சென்னையில் 3304 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரேநாளில் சென்னையில் மட்டும் 16 பேர் பலியான நிலையில் தமிழகம் முழுதும் 42 பேர் இறந்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையை பொறுத்தவரை 25 ஆயிரத்து 11 பேர் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் தவிர இன்று உயிரிழந்த 42 பேரும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் அலையில் வேகமெடுத்துள்ள கொரோனா பரவல் ஒருபுறம் இருக்க தடுப்பூசி வழங்கும் பணியும் நடந்து வருகின்றது.
இந்நிலையில் மருத்துவக்குழுவின் ஆலோசனைப்படி வரும் 20-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகின்றது. மேலும் ஞாயிற்று கிழமைகளில் முழுநேர ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலுக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.