அழகுக்காக டெர்மடாலஜிக்கல் சிகிச்சை எடுத்துக்கொள்ள சென்ற பிரபல நடிகை ரைசா வில்சனுக்கு ஃபேஷியல் சிகிச்சை முடிந்ததும் கண்களில் வீக்கங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த ட்ரீட்மெண்டை தனக்கு செய்த தோல் மருத்துவர் பைரவி செந்தில் மீது புகார் கூறியுள்ளார் ரைசா. தான் சாதாரண ஃபேஷியல் ட்ரீட்மென்ட் செய்துகொள்ள தோல் மருத்துவர் பைரவி செந்திலை அணுகியதாகவும், அப்போது பைரவி செந்தில் தனக்கு பிடிக்காத ஒரு ஃபேஷியல் முறையை செய்யச்சொன்னதாகவும் கூறியுள்ளார் ரைசா. அதனால் தற்போது தனது கண்கள் வீங்கியுள்ளதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, அதற்கு காரணம் அந்த தோல் மருத்துவர் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஊட்டியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ரைசா அதன் பிறகு பெங்களூருவில் தனது பட்டப்படிப்பை முடித்தார். மாடல் அழகியான ரைசா மிஸ் இந்திய சவுத் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று சில பரிசுகளும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக மாடலிங் துறையில் வலம்வந்த ரைசாவிற்கு 2017-ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் கஜோலின் அசிஸ்டெண்ட்டாக நடித்திருந்தார்.
அதன் பிறகு பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்ற இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரைசா 63-வது நாள் வெளியேறினார். அதன் பிறகு படவாய்ப்புகள் பல வந்த நிலையில், எலன் இயக்கத்தில் யுவன் இசையில் வெளியான ”பியார் பிரேமா காதல்” படத்தில் நாயகியாக தோன்றி அசத்தினார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே மற்றும் வர்மா உள்ளிட்ட படங்களில் நடித்தார் ரைசா. தற்போது ரைசா நடிப்பில் இவ்வாண்டு 4 திரைப்படங்கள் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனது கனவில் வளர்ந்துவரும் நிலையில் தனது தோல் மருத்துவரின் தவறான அறிவுறுத்தலால் தனது கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அந்த மருத்துவரை தொடர்புகொள்ள அவர் கிளினிக்கை அணுகியபோது அவர் அங்கு இல்லை என்று தகவல் கிடைத்ததாகவும் ரைசா குறிப்பிட்டுள்ளார்.
ரைஷாவின் இந்த குற்றச்சாட்டு இந்திய சினிமா உலகில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சினிமாத்துறையில் அதிலும் நடிப்பு துறையில் பணியாற்றுவோர் தங்கள் முக அழகிற்கு அதிக அளவு மெனக்கெடுவார்கள். அதிலும் ரைஷா போன்றோர் இன்னும் அதிக கவனம் செலுத்துவார்கள். கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரைசா தனது நீண்ட நேரத்தை முக சருமத்தை பாதுகாக்க செலவிட்டதை பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் அறிவார்கள். அப்படி இருக்கும் போது ரைஷாவின் இந்த குற்றச்சாட்டு அவரின் உள்ளார்ந்த வருத்தத்தின் வெளிப்பாடு என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.