விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக  உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பில் புயலை கிளப்பியிருந்தார். மேலும், இது பிரபாகரன் குடும்பத்தினர் தெரிவித்த தகவல் என்றும் அவர் விரைவில் வெளியே வருவார் என்றும் கூறியிருந்தார்.  பழ. நெடுமாறன் தெரிவித்த கருத்து இந்தியா மட்டும் இன்றி இலங்கையிலும் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது.


மகிழ்ச்சி:


இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியிடம் இதுகுறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைத்தால் அவரை நேரில் சந்திப்பேன் என கூறியுள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஒருவர் உயிரோடு இருக்கிறார் என சொன்னால் மகிழ்ச்சிதான். அப்படி வந்தால் நானும் சென்று பார்த்துவிட்டு வருவேன். நாங்கள் தலையீட்டு எதுவும் சொல்ல வரவில்லை" என்றார்.


முன்னதாக, நெடுமாறன் தெரிவித்த கருத்தை இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பிரபாகரன் உயிரிழந்த விவகாரத்தில் அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் இருப்பதாக இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஏபிபி நாடுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருந்தார்.


ஏன் சொன்னார்?


அவர் ஏபிபி நாடுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், ”டிஎன்ஏ அறிக்கை தொடங்கி எல்லா ஆதாரமும் எங்களிடம் உள்ளது. நிலைமை இப்படியிருக்கையில் குறிப்பிட்ட அந்த நபர் (பழ.நெடுமாறன்) எதன் அடிப்படையில் அப்படி சொன்னார் என தெரியவில்லை. ஏற்கனவே நாங்கள் போரின் போது பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை நிரூபித்து விட்டோம்” என விளக்கம் அளித்தார்.


பின்னர், இது தொடர்பாக தெளிவுப்படுத்திய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான பேட்டிகள் தொடர்பாக உரிய தகவல் கிடைத்த பிறகு பதில் தரப்படும் எனக் கூறினார்.


உள்நாட்டுப் போர்:


26ஆண்டு காலமாக, இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகள் இயக்கிற்கும் இடையே நடந்த உள்நாட்டு போரின்போது லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். இரண்டு தரப்பின் மீதும் போர் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, போரின் இறுதி கட்டத்தில் மோசமான முறையில் மனித உரிமை மீறல்கள் அரங்கேறின.


அதன் தொடர்ச்சியாக, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார். 2007 முதல் 2009 வரையிலான இறுதி கட்ட போரில் தமிழ்மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் மீது குற்றம்சாட்டப்படுகிறது.


அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புத்துறை செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தலைமையில் இந்த போர் குற்றங்கள் நடந்ததாக உலக நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.