இந்தியாவை பொறுத்தவரையில் அரசியல் தலைவர்களுக்கு இணையான முக்கியத்துவம் அரசு அதிகாரிகளுக்கு தரப்படுகிறது. அரசு திட்டங்களை கடைகோடி மக்கள் வரை சென்று சேர்ப்பதில் அரசு அதிகாரிகளின் பங்கு அளப்பரியது. சில சமயங்களில், அரசு அதிகாரிகள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதும் நடந்து வருகிறது.


தற்போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள எஸ். ஜெய்சங்கர் கூட, இந்திய வெளியுறவு பணி அதிகாரியாக பதவி வகித்தவர்தான்.


அந்த வகையில், கடந்த 2021ஆம் ஆண்டு, திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து அரசு அதிகாரிகளை நியமிப்பதில் அதிக கவனம் செலுத்து வருகிறது.


ஐஏஎஸ் அதிகாரியான வெ. இறையன்புவை தலைமை செயலாளராகவும் ஐபிஎஸ் அதிகாரியான சைலேந்திர பாபுவை தமிழ்நாடு காவல்துறை தலைவராகவும் நியமித்தது வரை அதிக கவனம் செலுத்தி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 


இந்நிலையில், அரசு அதிகாரிகளின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், அதிகாரிகள் கவனித்து பேணி பாதுகாத்தால் திட்டங்கள் வளரும் என கூறியுள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், "அதிகாரிகள் கவனிக்கத் தவறினால் திட்டங்கள் மடியும். கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்ட உழவர் சந்தைகள் உள்ளிட்ட திட்டங்கள் அதிகாரிகள் கையில்தான் உள்ளன.


பெரும் நன்மை தரக்கூடிய திட்டங்களை அரைகுறையாக செயல்படுத்தினால் சிறு நன்மை கூட ஏற்படாது. திட்ட செயலாக்கத்துக்கு அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும். திட்டங்களை செயல்படுத்தும்போது துறைசார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளை முழுமையாக பெற வேண்டும்.


2 மாதங்களில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் பல திட்டங்களில் முன்னேற்றம் காணப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.


திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் பொற்காலத்தை உருவாக்க அரசு செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியான ஆய்வுகளால் தொய்வில்லாத நிர்வாகத்தை உருவாக்க முடியும்.


அரசு நிர்வாகம் என்பது நாம் அனைவரும் சேர்ந்து இழுக்கும் தேர். ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முழுமையாக செலவிடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறேன்" என்றார்.


தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பெரிய திட்டப் பணிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், துறை வாரியாக தொகுக்கப்பட்டு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.


கடந்த 9ஆந்தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல், சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அற நிலையத்துறை, பள்ளி கல்வி, சுற்றுச்சூழல், வனத்துறை, கால்நடை, பால்வளம், மீன் வளம், பொதுத்துறை, உயர்கல்வி, தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சமூக நலன் மகளிர் உரிமை, வருவாய் துறை ஆகிய 12 துறைகள் சார்ந்த 51 திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.