பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ABP நாடுவிற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.


இதுதொடர்பாக தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு கேள்வி எழுப்பியபோது,  பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான பேட்டிகள் தொடர்பாக உரிய தகவல் கிடைத்த பிறகு பதில் தரப்படும் என, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவிவித்துள்ளார். 


பழ. நெடுமாறன்  செய்தியாளர் சந்திப்பு:


தஞ்சாவூரில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் எனத் தெரிவித்தார். மேலும் பிரபாகரன் உள்ள இடத்தை தற்போது கூற முடியாது என்றும், இதனை பிரபாகரனின் அனுமதியுடன் வெளிப்படுத்துகிறேன். இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் இந்த தகவலை கூறுகிறேன் என்றும் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார். இது பல விவாதங்களை கிளப்பியது. 


ராணுவ செய்தி தொடர்பாளர் விளக்கம்:


இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி நடந்த இறுதிகட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்து விட்டார். கண்டிப்பாக அவர் உயிருடன் இல்லை என இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி பழ.நெடுமாறனின் கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் ஏபிபி நாடுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், ”டிஎன்ஏ அறிக்கை தொடங்கி எல்லா ஆதாரமும் எங்களிடம் உள்ளது. நிலைமை இப்படியிருக்கையில் குறிப்பிட்ட அந்த நபர் (பழ.நெடுமாறன்) எதன் அடிப்படையில் அப்படி சொன்னார் என தெரியவில்லை. ஏற்கனவே நாங்கள் போரின் போது பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை நிரூபித்து விட்டோம்”.


“அதேசமயம் இதுவரை எங்களுக்கு செய்தியாளர் சந்திப்பு குறித்த தகவல் வந்துள்ளது. விரைவில் இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக பதிலளிப்பார்” எனவும்  இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான பேட்டிகள் தொடர்பாக உரிய தகவல் கிடைத்த பிறகு பதில் தரப்படும் என, ABP நாடுவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவிவித்துள்ளார்.