கேரளாவில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியில் கேரள அரசு ஈடுபட்டு வருவதால், அதனை உடனே கைவிடவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,  “காவிரிப் படுகையில் அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் இப்பணியினை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர்  பினராயி விஜயனுக்கு இன்று அதாவது (23-5-2024) கடிதம் எழுதியுள்ளார். 


அதில், இந்த தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழ்நாடு அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், கேரள நீர்வளத் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளவாறு இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம் மற்றும் கேரளாவின் பவானி மற்றும் அமராவதி(பம்பார்) துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் (Master Plan) ஆகிய முழு விவரங்களை அளிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.


இந்தப் பிரச்சினை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு இவ்விவரங்கள் மிகவும் தேவை என்பதால் இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்கவும் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை இந்தப் பணியைத் நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு வலியுறுத்தியுள்ளார்” குறிப்பிடப்பட்டுள்ளது.