சாலை விதிகளை மீறியதாக அரசு விரைவு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த தாம்பரம் போக்குவரத்து போலீசார்


கடந்த சில நாட்களுக்கு முன்பு நாங்குநேரி பகுதியில், காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் சென்ற வீடியோ வைரலாக பரவியது. இந்தநிலையில் போக்குவரத்து போலீசார் விதிகளை மீறும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் பணியை துவங்கியுள்ளனர். 


 அரசு பேருந்துகள் மீது அபராதம்


தாம்பரம் காவல்  எல்லைக்குட்பட்ட தாம்பரம் போலீசார் அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக அரசு பேருந்துகளுக்கு அபராதங்களை விதித்துள்ளனர். சென்னையில் இருந்து  திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பேருந்து விதிகளை மீறி சென்றதாக பேருந்து ஓட்டுனர் சுப்பிரமணி மீது ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தவில்லை மற்றும்  நோ பார்க்கிங் ஆகிய   இரண்டு பிரிவின் கீழ் தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.




இதேபோன்று புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பேருந்து மீதும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  அதிகளவு பயணிகளை ஏற்றி வந்தது மற்றும்  நோ பார்க்கிங் ஏரியாவில் பேருந்து நிறுத்தியது ஆகிய இரண்டு பிரிவின் கீழ் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,


"நாங்குநேரியில் நடந்த சம்பவம்"


நாகர்கோவிலில் இருந்து நெல்லை - நாங்குநேரி வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.  அப்பொழுது நாங்குநேரி நீதிமன்றம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து காவலர் ஒருவர் அந்த பேருந்தில் ஏறி உள்ளார். நடத்துனர் சம்பந்தப்பட்ட  காவலரிடம் டிக்கெட் கேட்ட பொழுது  காவல்துறை டிக்கெட் எடுக்க தேவையில்லை என காவலர் மறுத்ததாக தெரிகிறது. அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் பணி நிமிர்த்தமாக பயணிக்கும் போது டிக்கெட் எடுக்க தேவையில்லை. எனவே நான் டிக்கெட் எடுக்க மாட்டேன் என காவலர் கூறியுள்ளார்.  அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும், வாரண்ட் இல்லாமல்  பயணித்தால் டிக்கெட் எடுக்க வேண்டும் என நடத்துனர் எடுத்துக் கூறியுள்ளார்.




அரசு ஊழியர் நான் பணி நிமித்தமாக செல்லும்பொழுது டிக்கெட் எடுக்க வேண்டாம் என மீண்டும் காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  ஒரு கட்டத்தில் பயணிகள் சிலர் நாங்களே காவலருக்கு டிக்கெட் எடுக்கிறோம் என்று தான் கூறியும் காவலர் ஏற்றுக் கொள்ளாததால், பேருந்து அங்கிருந்து செல்லாமல் நின்று கொண்டு வந்துள்ளது.  ஒரு கட்டத்தில் பயணிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் காவலர் டிக்கெட் எடுக்க ஒப்புக்கொண்டதை தொடர்ந்து பேருந்து அங்கிருந்து சென்றது.


"பழிக்கு பழி"


இந்தநிலையில், இது தொடர்பான வீடியோவை எடுத்த நடத்துனர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.  இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்தான் காவலர்கள் விதிகளை மீறும் அரசு பேருந்துகள் மீது,  அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவலர் ஒருவர் பயணச்சீட்டு இல்லாமல்,  பயணம் செய்ய வாக்குவாதம் செய்த வீடியோ வைரலான நிலையில்,  தற்போது  போக்குவரத்து காவலர்கள் அரசு பேருந்து மீது அபராதம் விதித்து வருவது பழிக்கு பழி  நடைபெறும் சம்பவமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.