வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 


சென்னை எழிலகத்தில் உள்ள அவசர செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எவ்வளவு மழை வந்தாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது. சமாளீக்க முடியாத அளவு எங்கேயும் மழை பாதிப்பு இருப்பதாக தகவல் வரவில்லை. மத்திய அரசு கொடுத்த பேரிடர் நிதி போதுமானதாக இல்லை. ஃபெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2000 அனைவருக்கும் கொடுக்கப்பட்டு விட்டது. 


ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டட்திற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரனை அனுப்பி வைத்துள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம். கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்போம்” எனத் தெரிவித்தார். 


இதனிடையே தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  டிசம்பர் 16ஆம் தேதி முதல் 18 ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் கனமழை இருக்கும் எனவும் 17 ஆம் தேதி கனமழை முதல் மிக மிக கனமழை இருக்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடித்து வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் குமரிக்கடல் வழியே மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை நிலவரம், பாதிப்புகள், அணை திறப்பு உள்ளிட்ட விவரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்து ஆய்வு நடத்தினார். 


 இதனிடையே பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும் அதிகனமழை பெய்ய உள்ளதாக வெளியே வர வேண்டாம் என தென்காசி மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.