ஒரு காலத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை கட்டி ஆண்டவராக அறியப்படும் மு.க.அழகிரி, விரைவில் மீண்டும் திமுகவில் இணைத்துக்கொள்ளப்படவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி திமுக வட்டாரத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.


முதல்வருக்கு மன்னிப்பு கடிதம் எழுதிய அழகிரி ஆதரவாளர்கள்


திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் வேறு எந்த கட்சிக்கும் செல்லாமல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்கள். அழகிரி ஆதரவாளர்களாக அறியப்படும் நபர்கள் வேறு யாருடைய ஆதரவாளர்களாகவும் மாறாமல், அழகிரியிடம் அதிகாரம் இருந்தப்போது எப்படி இருந்தார்களோ அதே மாதிரியே அதிகாரம் இல்லாத சூழலிலும் அவருடைய ஆதரவாளர்களாகவே தொடர்ந்து  இத்தனை ஆண்டுகளாக பயணித்து வருகிறார்கள்.


ஆனால், தொடர்ந்து அரசியல் களத்தில் பங்களிப்பு இல்லாமல் ஒதுங்கியே இருந்தால், காலப்போக்கில் தங்களுடைய அரசியல் வாழ்க்கையே சூனியமாகிவிடும் என்பதை அறிந்த அவர்கள், இது குறித்து அழகிரியிடம் தெரிவித்ததாகவும், அவர்கள் கருத்தில் உடன்பட்ட அழகிரியும், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி, தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளும்படியும் கோரிக்கை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.


இந்நிலையில், அழகிரி ஆதரவாளர்கள் 9 பேர் மன்னிப்பு கடிதம் எழுதி, அதனை மதுரை நகர் திமுக மாவட்ட செயலாளர் கோ தளபதி வாயிலாக முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


அழகிரியின் நிழலாக இருக்கும் மன்னனும் கடிதம் எழுதினார்


மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும் அவரது விசுவாசியும் அவரின் நிழல் என்று அறியப்படுபவருமான மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனும் மன்னிப்பு கடிதம் எழுதி முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரோடு, இசக்கிமுத்து உள்ளிட்ட 9 பேர் மன்னிப்பு கடிதம் எழுதி தங்களை கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் திமுக தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளர்.


 மன்னிப்பு கடிதத்தில் எழுதியிருப்பது என்ன ?


இந்நிலையில், அழகிரி ஆதரவாளர் இசக்கிமுத்து என்பவர் எழுதியுள்ள மன்னிப்பு கடிதத்தில், நான் 1973ஆம் ஆண்டு முதல் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தததாகவும், வட்டச் செயலர் முதல் அவைத் தலைவர் வரை பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன் என்று குறிப்பிட்டு, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் தேர்தலில், அழகிரி ஆதரவாளர்களான நாங்களும் மனுதாக்கல் செய்தோம். ஆனால், எங்கள் மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், கோபமடைந்த அழகிரி, இந்த விஷயத்தை திமுக தலைவர் மு.கருணாநிதி கவனத்திற்கு கொண்டுச் சென்று, அப்போதைய அமைப்பு செயலாளரை அழைத்து கடுமையாக கண்டித்தார். பின்னர், அவர் வெளிநாடு சென்ற நிலையில், சிலர் திமுக போட்டி பொதுக்குழு நடக்கும் என்று போஸ்டர் அடித்தனர். ஆனால், அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. எனவே எங்கள் நீக்கத்தை ரத்து செய்து, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீக்கப்பட்ட இத்தனை ஆண்டுகளில் வேறு எந்த கட்சிக்கோ அமைப்புக்கோ நாங்கள் செல்லவில்லை என்பதை கவனத்தில் கொண்டு திமுக தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தேர்தலை கருத்தில் கொண்டு முடிவு


எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு பெற்று மீண்டும் அரசியல் களத்திற்கு வர வேண்டும் இல்லையென்றால் அரசியலில் தங்களுக்கு எதிர்காலம் இல்லாமல் ஆகிவிடும் என்பதை உணர்ந்து இந்த மன்னிப்பு கடிதம் எழுதப்பட்டிருப்பதால், வரும் தேர்தல்களில் மீண்டும் அழகிரியின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.


அழகிரியின் நிலை என்ன ?


கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தன்னுடைய தம்பியும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன் இணக்கமாக செல்லும் முடிவை மு.க.அழகிரிஎடுத்துவிட்டதாகவும், முதல்வரும், அழகிரி மகன் தயா அழகிரி வேலூர் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றபோது இரண்டு முறை சென்று பார்த்து, அவருக்கான சிகிச்சையை முறையாக வழங்க மருத்துவர்களை அறிவுறுத்தியும் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துக்கொடுத்தார். இந்நிலையில், இருவரும் கண்களும் பனித்து இதயம் இனித்துள்ளதால், விரைவில் அழகிரியும் திமுகவில் இணைத்துக்கொள்ளப்படுவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


என்றும் அண்ணன்...


ஒரு வருடத்திற்கு முன்னர் ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், மு.க.அழகிரி என்றென்றும் என் அண்ணன் என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.