kalaignar kaivinai thittam 2024: தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினை திட்டத்திம், மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துடன் எப்படி வேறுபடுகிறது என கீழே விவரிக்கப்படுள்ளது.
கலைஞர் கைவினை திட்டம்:
தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில், கலைஞர் கைவினை திட்டம் எனும் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, “தமிழ்நாட்டில் உள்ள கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்தும் நோக்கிலும் கலைஞர் கைவினை திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், குடும்ப தொழில் அடிப்படையில் இல்லாமல் 25 கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலை தொடங்கவும், செய்யும் தொழிலை நவீன வடிவில் மேம்படுத்தவும் கடன் உதவிகளும், திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும்.
கடன் எவ்வளவு வழங்கப்படும்?
இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கடனுதவி பெறலாம். 25 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும். 5 சதவிகிதம் வரை வட்டி மானியமும் உண்டு. பயனாளிகள் குறைந்தபட்சம் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மரவேலைகள், படகு தயாரித்தல், உலோக வேலை, மண்பாண்டம், கூரை முடைதல், கட்டிட வேலை, கயிறு பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், பொம்மை தயாரிப்பு, மலர் வேலை, தையல் வேலை, நகை செய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை, துணி வெளுத்தல், துணி தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், துணி கலைவேலைபாடுகள், பாசிமணி வேலைப்பாடு, பனை ஓலை, பிரம்பு வேலைப்பாடு, ஓவியம் வரைதல், வர்ணம் பூசுதல் உள்பட 25 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களை மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் தலைமையிலான குழு சரிபார்த்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும். தமிழகத்தில் உள்ள கைவினைக் கலைஞர்கள் இத்திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்” என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக குற்றச்சாட்டு:
அண்ணாமலை வெளியிட்டு இருந்த டிவிட்டர் பதிவில், “பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைச் செயல்படுத்துவதை தடுத்ததன் விளைவாக தமிழக மக்களின் வேதனையை எதிர்கொள்ள முடியாமல், திமுக அரசு விஸ்வகர்மா திட்டத்தின் கட்-காப்பி-பேஸ்ட் பதிப்பை அதன் ஸ்டிக்கர் ஒட்டி வெளியிட்டது. திமுக அரசால் தொடங்கப்பட்ட புதிய திட்டம் சில தகுதி தளர்வுகளுடன் வருகிறது. இது உள்ளூர் திமுக செயல்பாட்டாளர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது” என குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசு விளக்கம்:
பாஜகவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, “ பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தங்கள் குடும்பத் தொழிலில் 18 வயதிருக்கு முன்பே ஈடுபடத் தூண்டும் வகையில் உள்ளது. இது மாணவர்களை உயர்கல்வி கற்கும் ஆர்வத்தைக் குறைத்து குலத் தொழிலில் தள்ளும் என்பதால் இதில் தமிழ்நாடு அரசு இணையவில்லை. குலத்தொழில் ஊக்குவிப்பாக இல்லாமல், மாணவர்கள் உயர்கல்வி கனவைச் சிதைக்காமல் அதே நேரத்தில் இவ்வகை தொழில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் வேண்டும் என , 'கலைஞர் கைவினைத் திட்டம்' முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் , வகுப்பு அடிப்படையில் எனச் சுருங்காமல், தொழில் ஈடுபடுவோருக்கு மட்டும் உதவும் வகையில் கலைஞர் கைவினை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.