CM Stalin Security Vehicles: முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்த தொடங்கியுள்ள புதிய காரில், என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
புதிய காரை பயன்படுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்:
முதலமைச்சரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரது பயணத்தின்போது எப்போதும் போலீசார் உடனிருப்பர். முதலமைச்சர் பயணிக்கும் வாகனத்திற்கு முன்பும், பின்பும் பாதுகாப்பு படை வீரர்கள் இருப்பர். இதுநாள் வரையில் இதற்காக பயன்படுத்தி வந்த வாகனங்களை, புத்தாண்டின் முதல் நாளான இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முற்றிலுமாக மாற்றியுள்ளார்.
ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் இருந்து தனது தாயார் தயாளு அம்மாளிடம் புத்தாண்டு வாழ்த்து பெற கோபாலபுரம் சென்றார். அப்போது புதிய கார்கள் அவரது கான்வாய் வாகனங்களாக வந்தன. கருப்பு நிறத்தில் உள்ள அந்த 6 இனோவா கார்களிலும் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பு வசதிகள்:
முதலமைச்சர் பயன்படுத்தும் புதிய பாதுகாப்பு கார்களில் 3 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. காரின் மேல் பகுதியில் இருந்து சுற்றி நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் படமாக்கும் வகையில் இந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளன. முதலமைச்சர் காரில் பயணிக்கும்போது அதன் வெளியே நின்றவாறு பாதுகாப்பு வீரர்கள் சுமார் 10 பேர் நிற்கும் அளவிற்கு பக்கவாட்டில் இடவசதி ஏற்பட்டுள்ளது.
முன்பு பயன்படுத்திய வாகனங்களை போல் இல்லாமல் தனித்து தெரியும் வகையில் கார்கள் மாற்றப்பட்டுள்ளன. முன்னதாக வெள்ளை நிறத்தில் இருந்த முதலமைச்சரின் கார்கள் தற்போது கருப்பு நிறத்தில் மாற்றப்பட்டு, அதன் முன்புறம் pilot என்று பொறிக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் கான்வாய்:
முதலமைச்சர் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவரது வாகனத்தின் முன்பும் பின்பும் கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும். அதில் குண்டு துளைக்காத ஜாமர் கார், இணைய வழியிலான ஆபத்துகள் இருந்தால் துண்டிக்கத் தொழில்நுட்ப வசதி கொண்ட ஒரு கார், அட்வான்ஸ் பைலட், அட்வான்ஸ் டிசி உள்ளிட்ட கார்கள் இடம் பெறும். டி.எஸ்.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி முதலமைச்சரின் காருக்கு முன்னதாக சென்று அங்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வார்.