Calender Sale: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 400 கோடி ரூபாய்க்கு காலண்டர் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காலண்டர் விற்பனை:


விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், புத்தாண்டிற்கான தினசரி மற்றும் மாதக் காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. பிரத்யேகமாக, தினசரி மற்றும் மாத காலண்டர்கள்   தயாரிப்பு பணிகளில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.


மாதக்  காலண்டர் தயாரிப்பு பணிகளில் நூற்றுக்கணக்கான அச்சகங்கள் ஈடுபட்டு வருகின்றன. காலண்டர் தயாரிப்பில் உள்ள சின்னசின்ன பணிகளில் நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. 


சூடுபிடித்த விற்பனை:


நான்கு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்தப் பணியில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் வரவேற்க வந்த நிலையில் தென் மாவட்டங்களான விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக உற்பத்தி  பாதிக்கப்பட்டது.


இருந்தபோதிலும் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை என்பது கொட்டி தீர்த்தது.  இதன் காரணமாக பட்டாசு மற்றும் அச்சக தொழில்கள் செயல்படாத நிலை ஏற்பட்டது.இந்த நிலையில்பெய்த மழை காரணமாக 4 மாதங்களாக நடைபெற்று வந்த காலண்டர்கள் தயாரிப்பு பணிகள் தற்போது நிறைவு கட்டத்தில் உள்ளன.


2024ம் ஆண்டிற்கான காலண்டர்கள் அச்சடித்து வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் பெறப்பட்டு,சுமார் 90 சதவிகித ஆர்டர்களுக்கு காலண்டர்கள் அனுப்பும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள ஆர்டர்கள், இன்னும் ஒரு சில வாரங்களில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணிகளில் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. 


400 கோடி ரூபாய்க்கு விற்பனை:


இது குறித்து காலண்டர் தயாரிப்பாளர்கள் கூறும்போது, ”புத்தாண்டிற்கான தினசரி மற்றும் மாத காலண்டர்கள் தயாரிக்கும் பணிகளும், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன. இந்த ஆண்டு காலண்டர்கள் விற்பனை சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்கு இருந்தது.


ஒவ்வொரு இல்லங்களிலும், காலண்டர்களில் தினசரி கிழிக்கப்படும் தாளில் சிவகாசி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நிறுவனங்களும், அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும் இருந்து வருகிறது. அடுத்த புத்தாண்டிற்கான காலண்டர் தயாரிக்கும் பணிகள் மீண்டும், வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று, தமிழ் பஞ்சாங்கம் வெளியானவுடன் துவங்கும்" என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.


மேலும், 2024ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு தினசரி மற்றும் மாத காலண்டர்கள் விற்பனை அமோகமாக இருந்ததாகவும், சுமார் 400 கோடி ரூபாய்க்கு காலண்டர்கள் விற்பனையாகி உள்ளது என்றும் காலண்டர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.




மேலும் படிக்க


IPS Reshuffle: ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு! 10 பேருக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு அதிரடி!