வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் பெய்தது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் சேதத்துக்குள்ளாகின. இதனையடுத்து சேதங்களை பார்வையிட மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குழு ஒன்றை அனுப்பி வைத்தது. இதற்கிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தொடர்ந்து பார்வையிட்டார்.
இந்தச் சூழலில் கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். டெல்லியில் நிகழ்ந்த இந்த சந்திப்பில் தமிழ்நாட்டிற்கு ரூ.2,079 கோடியை மழை வெள்ள நிவாரணமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
மத்திய அரசிடம் கூடுதலாக நிதி கேட்கப்படுமென வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பாதிப்பு குறித்த அறிக்கையும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை தமிழ்நாட்டுக்கு நிதியானது விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு நிதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார். அவர் பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “கொரோனா பெருந்தொற்றால் மாநிலத்தின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிரந்தரமாக சீரமைக்க நிதி தேவைப்படுகிறது.
எனவே தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு 6,230 கோடி ரூபாய் வழங்கிட வேண்டும். தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக 1,510.83 கோடி ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 4,719.62 கோடியும் வழங்கிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: TN Gold Loan Waiver: யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? பட்டியல் இதோ!
யார் எதிர்த்தாலும் திருவண்ணாமலைக்கு சிப்காட் வந்தே தீரும் - எ.வ.வேலு சபதம்