திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சி அலுவலகம் அருகே பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.என். அண்ணாதுரை, எம்.கே.விஷ்ணு பிரசாத், கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 2,487 நபருக்கு 750.59 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழக மக்களின் நாடிபிடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சியில் கடந்த 10 ஆண்டாக தொய்வு காணப்பட்டது; கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏதும் நடக்கவில்லை. மக்களை தேடி மருத்துவம் மூலம் வீடுதேடி மருந்து வழங்கப்படுகிறது. நான் முதல்வருடன் நீண்டதூரம் பயணிக்கும் போது அவரிடம் மனு கொடுக்க மக்கள் குவிந்து வருகின்றனர். இன்னுயிர் காக்கும் திட்டம், நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டம் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
திமுக ஆட்சியில் மட்டும் தான் திருவண்ணாமலை மாவட்டம் வளர்ச்சி பெற்று வருகிறது. கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் இழந்தனர். அதற்காக அதிமுக அரசிடம் 5 ஆயிரம் கேட்டும் தரவில்லை. திமுக வெற்றி பெற்று முதல்வராக மு.கஸ்டாலின் பொறுப்பேற்று போட்ட முதல் கையெழுத்து 4 ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டைகளுக்கு வழங்கினார். ஒன்றிய அரசு மக்களை காப்பாற்றுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என திமுக ஆட்சியை பாராட்டுகிறது. மாவட்டத்தின் வடபகுதியான செய்யாறில் சிப்காட் தொடங்கியது திமுக ஆட்சியில் தான் தென் பகுதியில் அமைக்க வேண்டும் என நான் வைத்த கோரிக்கையை முதல்வர் ஏற்று அனுமதி வழங்கினார்.
அதற்கான நில எடுக்கும் பணி செய்ய முயலும் போது சில விவசாயிகள் நிலம் தர மறுக்கின்றனர். நான் அமைச்சராக இருந்தாலும் நான் ஒரு விவசாயி மாவட்டத்தில் உள்ள பிள்ளைகள் எல்லோரும் என் பிள்ளைகளாக நினைத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்லநோக்கத்தின் அடிப்படையில் திட்டங்களை கொண்டு வந்தால் அதனை விவசாயிகள் போர்வையில் இருக்கும் என சிலர் எதிர்க்கிறார்கள். இந்தியாவின் 4வது தூண் என சொல்லப்படும் பத்திரிகையாளர்கள் முன்னலையில் நான் இப்போது கூறுகிறேன். யார் எதிர்த்தாலும் செங்கம் அருகே புதிய சிப்காட் கண்டிப்பாக வந்தே தீரும் என எ.வ.வேலு பேசினார்.