சாதியற்ற சமதர்ம பகுத்தறிவு கொண்ட சமுதாயத்தை உருவாக்க ஜனநாயக வழியில் உழைப்பதே அண்ணாயிசம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை, ஆர்.ஏ.புரத்தில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதன் பின்னர் பொன்மனச் செம்மல் எம்.ஜிஆர் என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். தொடர்ந்து இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு:


கலைஞர் என்னை வென்றார் எனக் கூறிய எம்ஜிஆர்


”சுயமரியாதை கொள்கை கொண்ட கலைஞரை தேசிய இயக்கக் கொள்கைக்கு இழுக்க முயன்று இறுதியில் திமுகவில் இணைந்த எம்.ஜி.ஆர், கலைஞர் என்னை வென்றார் எனப் பலமுறை குறிப்பிட்டுள்ளார். என்னுடைய ஒரே வாரிசு ஜானகி மட்டும்தான்” என்று உயில் எழுதி வைத்திருந்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.


மனைவி என்ற அடிப்படையில் மட்டுமல்ல திரையுலகத்திலும், அரசியல் உலகத்திலும் பக்கபலமாக அவருக்கு இருந்தவர் ஜானகி. மக்கள் திலகம் அவர்களால் உருவாக்கப்பட்ட காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதோர் குழந்தைகள் இல்லத்தை சிறப்பாக நடத்தியவர் மட்டுமல்ல இந்த கல்லூரியையும் தொடங்கியவர் ஜானகி.


1991 முதல் 1995 வரை, இதற்கான அனுமதியை அவரால் பெற முடியாமல் இருந்தது. அது என்ன சூழ்நிலை, எப்படி என்பதையெல்லாம் நான் விளக்க விரும்பவில்லை. ஆனால் கல்விக்காக. கருணை வடிவான ஜானகி கேட்டார் என்பதற்காக கலைஞர் உடனடியாக அனுமதி வழங்கினார்கள். அந்த நன்றியின் அடையாளமாகத்தான் நீங்களும் என்னை அழைத்திருக்கிறீர்கள் என்று நான் உளமாற நம்புகிறேன்.


சைகை மொழி பாடமாக அறிமுகம்


நான் இங்கு வருவது முதல் முறையல்ல. வரவேற்புரை ஆற்றுகிறபோது சொன்னார். ஏற்கனவே நான் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது இங்கே ஆண்டுவிழா நடைபெற்றபோது அந்த நிகழ்ச்சிக்கும் வந்திருக்கிறேன். இப்போது முதலமைச்சராக வருகை தந்திருக்கிறேன்.


சைகை மொழியை பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொழிப்பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஒரு வைத்திருக்கிறார்கள். மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


மாற்றுத்திறனாளிகள் துறையை முதலமைச்சர் என்கிற முறையில் நான் தான் கையில் வைத்திருக்கிறேன். அந்த வகையில் இந்தக் கோரிக்கைகளை செயல் திட்டம் ஆக்குவோம் என்பதை இந்த நேரத்தில் நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.


எம்ஜிஆர் - கருணாநிதி நட்பின் தொடர்ச்சி


டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியவர் தலைவர் கலைஞர்தான். கலைவாணர். ராஜா சாண்டோ என்கிற பெயரில் விருதுகளை வழங்கியவரும் தலைவர் கலைஞர்தான். அதேபோல், எம்.ஜி.ஆர் பெயரில் விருதுகளை வழங்கி அறிவித்தவரும் தலைவர் கலைஞர்தான். பராமரிப்பு இல்லாமல் இருந்த எம்.ஜி.ஆர். நினைவிடத்தை நவீனமாகக் கட்டியவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான். அந்த நட்பின் தொடர்ச்சியாகத் தான் இந்த விழா நடைபெற்று வருகிறது.


ஜானகி அம்மையாரின் ஆட்சி கலைக்கப்பட்டபோது - கிரீடத்தை தலையில் சூட்டிவிட்டு தலையை வெட்டியது போல இருக்கிறது என்று எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா பட்டம் கொடுத்துவிட்டு, ஜானகி அம்மையாரின் ஆட்சியைக் கலைத்தார்கள் என்று அன்றைக்கு கண்டித்தவர் தலைவர் கலைஞர். அதையும் மறந்துவிடக்கூடாது.


எம்.ஜி.ஆர். மறைந்தபோது, அண்ணா சாலையில் இருந்த தலைவர் கலைஞர் சிலை உடைக்கப்பட்டது. உடனடியாக அம்மையார் ஜானகி கலைஞருக்கு ஃபோன் செய்து வருத்தம் தெரிவித்தார். வருத்தம் தெரிவித்தது மட்டுமல்ல, "அதை நானே பொறுப்பேற்று கட்டித் தருகிறேன்" என்று சொன்னார். அந்த நல்ல உள்ளத்தை நான் இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறேன்.


இந்த அரங்கில் இத்தனை பெண்கள் குழுமி இருக்கிறீர்கள் படிக்க வந்திருக்கிறீர்கள். இந்தக் காட்சியை அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் 100 ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்க முடிந்ததா? என்றால் பார்க்க முடியவில்லை. இப்போது பார்க்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் திராவிட இயக்கம் தான். அப்படிப்பட்ட திராவிட மாடல் ஆட்சியைத்தான் கல்வியில், வேலைவாய்ப்பில் அனைவருக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக உழைத்த இயக்கம் திராவிட இயக்கம்.


அண்ணாயிசம்


இதனுடைய அடிப்படை இலட்சியங்களின் மீது எம்.ஜி.ஆரும், ஜானகியும் பற்று கொண்டு செயல்பட்டு வந்தார்கள். எம்.ஜி.ஆர். தனி இயக்கம் கண்டாலும், தனது கொள்கையில், அண்ணாயிசத்தை அவர்கள் கட்டிக்காத்தார். அண்ணாயிசம் என்று சொன்னால், 'சாதியற்ற, சமதர்ம, பகுத்தறிவு சமுதாயத்தை ஜனநாயக வழியில் நிறைவேற்ற உழைப்பதுதான் அண்ணாயிசம்' என்று அவரே வரையறுத்து சொல்லியிருக்கிறார். இத்தகைய அண்ணாயிசத்தில் உண்மையான பற்று கொண்டவர்கள் அனைவருக்கும் திராவிடக் கொள்கைகளைக் காக்கும் கடமை இருக்கிறது. அதனை நினைவூட்டக்கூடிய வகையில்தான் இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


திராவிட இயக்கக் கொள்கைகளைக் காப்பதும், அதன் மூலமாக தமிழ்நாட்டை மேன்மையடையச் செய்வதும்தான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், ஜானகி அம்மையாருக்கும் நாம் செய்யக்கூடிய மரியாதையாக இருக்கும். அதுதான் நம்முடைய நன்றிக்கடனாக இருக்கும்” எனப் பேசினார்.