தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அவரின் அதிகாரப்பூர்வ டெல்லி பயணம் இதுதான். நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கோரிக்கை விடுத்தார். தமிழகத்தின் வளர்ச்சி திட்டம் குறித்தும் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் பிரதமருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு நிகழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், “தமிழ்நாட்டிற்கு தேவையான கோரிக்கைகளை முழுமையாக தயாரித்து பிரதமரிடம் அளித்துள்ளோம்’’ என்றார்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார் மு.க.ஸ்டாலின். டெல்லியின் அக்பர் இல்லத்தில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ள நிலையில் முதலமைச்சராக பதவியேற்று தற்போதுதான் காங்கிரஸ் தலைமையை ஸ்டாலின் சந்தித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ளதால் அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த சந்திப்பின் போது மு.க.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலினும் உடன் இருந்தார்.
மு.க.ஸ்டாலின் வருகை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ''நானும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்க்கா ஸ்டாலினை இன்று சந்தித்தோம்.தமிழ் மக்களுக்கு ஒரு வலுவான மற்றும் வளமான மாநிலத்தைக் கட்டியெழுப்ப திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்
பிரதமர் உடனான சந்திப்புக்கு பிறகு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் சந்தித்துப் பேசினர். பின்னர் மத்திய அரசின் பணியில் உள்ள தமிழக பணிநிலைப் பிரிவைச் சேர்ந்த அலுவலர்களையும் சந்தித்தார். டெல்லி தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தினரும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். அப்போது கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 50,000க்கான காசோலை வழங்கப்பட்டது.
25 நிமிட சந்திப்பு.. 25 கோரிக்கை.. முதல்வர் பிரதமர் சந்திப்பில் நடந்தது என்ன?