25 நிமிட சந்திப்பு.. 25 கோரிக்கை.. முதல்வர் பிரதமர் சந்திப்பில் நடந்தது என்ன?

பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டிற்கு அதிகளவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நிருபர்களுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

Continues below advertisement

“தமிழ்நாட்டிற்கு தேவையான கோரிக்கைகளை முழுமையாக தயாரித்து பிரதமரிடம் அளித்துள்ளோம். அவற்றில் முக்கியமான கோரிக்கைகளாக கூடுதல் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும், செங்கல்பட்டு மற்றும் ஊட்டியில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலைகளை உடனடியாக செயல்பட வைக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி ஆதாரத்தை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

 ஜி.எஸ்.டி. வரி நிலுவைை முழுமையாக தமிழகத்திற்கு அளிக்க வேண்டும். நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும். திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பபட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம். காவிரி நீருக்கு தடையாக இருக்கக்கூடிய மேகதாது அணை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்.


முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். காவிரி- கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு முன்னுரிமை் அளிக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் தொல்லைக்கு உள்ளாகி வரும் தமிழ்நாடு மீனவர்களின் பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், புதிய மின்சார சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் திட்டப்பணிகளை விரைந்து நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்து நடத்த வேண்டும்.

மருத்துவ கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்படோருக்கான இட ஒதுக்கீடு  வழங்கப்பட வேண்டும். அறிவிக்கப்பட்ட பாதுகாப்புத் துறை தொழிற்சாலை அமைக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையை திரும்ப பெற வேண்டும். நாடு முழுவதும் இலவச மற்றும் கட்டாய கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு பல்வேறு சலுகைகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும். சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அகதிகளாக வாழும் ஈழ தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சீரமைக்கப்பட வேண்டும். உலகப்பல்கலைகழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். இடஒதுக்கீடு எனப்படும் சமூகநீதி அளவுகோலை மாநிலங்களே நிர்வகித்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். சேது சமுத்திர திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.


ரெயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். குடியுரிமை திருத்தச்சட்டம், மூன்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் வழங்கியுள்ளோம்.

இவற்றில் பல ஒன்றிய அரசு நேரடியாக செய்ய வேண்டிய பிரச்சினைகள், பல மாநில அரசாகிய எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டிய பிரச்சினைகள். சில பிரச்சினைகள் இரு அரசுகளும் இணைந்து செய்ய வேண்டிய பிரச்சினைகள். எனவே, இந்த கோரிக்கைகளை தமிழக அரசும், ஒன்றிய அரசும் இணைந்து நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்ற முடியும் என்பதை இந்த சந்திப்பு எனக்கு அளித்துள்ளது.

இந்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுப்போம். இந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாகவும், திருப்திகரமானதாகவும் அமைந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பேன். நம்பிக்கையுடன் இருங்கள் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.


உறவுக்கு கைகொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அதன் அடிப்படையில் அடுத்த நடைமுறையை கடைபிடிப்போம்.

தமிழகத்திற்கு போதிய அளவிலான தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என்பது உண்மை. அதை மறுக்கவில்லை. அவர் போதியளவில் தடுப்பூசிகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமும் பேசி வருகிறோம். அவ்வப்போது அவர்களும் தடுப்பூசி அனுப்புகிறார்கள். அவர்கள் தரப்பு பிரச்சினைகளையும் கூறினார்கள்.


இருப்பினும் செங்கல்பட்டு, ஊட்டி தொழிற்சாலையை இயக்கினால்தான் இதை சமாளிக்க முடியும் என்ற அடிப்படையிலும் கோரிக்கை வைத்துள்ளோம். தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயமாக படிப்படியாக நிறைவேற்ற நாங்கள் ஈடுபடுவோம். மதுபானக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் படிக்க : பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Continues below advertisement