ஒரு வார கால மருத்துவமனை வாசத்துக்குப் பிறகு, முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை வீடு திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Continues below advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

நேரில் சென்று பார்த்த குடும்பத்தினர், அதிகாரிகள்

தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தவாறே முதல்வர் அரசு அலுவல்களில் ஈடுபட்டார். உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பயனாளிகளுடன் வீடியோ காலில் பேசினார். முதல்வரை குடும்பத்தினர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் சென்று பார்த்தனர்.

Continues below advertisement

இதற்கிடையே முதலமைச்சரின் இதயத் துடிப்பில் லேசான மாறுபாடு இருப்பதாகத் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொண்டது. இதில் சிக்கல்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கமான பணிகளை 2 நாட்களில் மேற்கொள்வார் எனவும் அப்பல்லோ தெரிவித்து இருந்தது.

கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

இந்த நிலையில், கடந்த இரு நாட்களாக கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். திமுக செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை பகிர, ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி தொடர்ந்து அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பினார் முதல்வர். இந்த கோரிக்கை மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமரிடம் வழங்குவார் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். 

வீடு திரும்பும் முதல்வர் ஸ்டாலின்

7ஆவது நாளாக இன்று முதலமைச்சருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்று (ஜூலை 27) மாலை 6.15 மணி வாக்கில், முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்புவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.