அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்று வரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளார். 

Continues below advertisement

 

நாணய வெளியீட்டை தொடர்ந்து உரையாற்றி வரும் அவர், "இது ராஜராஜனின் நம்பிக்கை பூமி. இளையராஜா இந்த நம்பிக்கை பூமியில் நம் அனைவரையும் சிவ பக்தியில் மூழ்கடித்தார். நான் காசியின் எம்.பி. 'ஓம் நம சிவாய' பாடல் கேட்கும்போது, எனக்கு புல்லரிப்பு ஏற்படுகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "சோழப் பேரரசு இந்தியாவின் பொற்காலங்களில் ஒன்று என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். ஜனநாயகத்தின் தாயாக திகழும் இந்தியாவில் அந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்றது சோழப் பேரரசு. 

ஜனநாயகத்தின் பெயரால் பிரிட்டனின் மாக்னா கார்ட்டாவைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் பேசுகிறார்கள். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, சோழப் பேரரசில் ஜனநாயக முறை மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மற்ற இடங்களைக் கைப்பற்றிய பிறகு தங்கம், வெள்ளி அல்லது கால்நடைகளைக் கொண்டு வந்த பல மன்னர்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். ஆனால், ராஜேந்திர சோழன் கங்கை நீரை கொண்டு வந்தான்.

இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளுடன் தங்கள் தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை கணிசமாக மேம்படுத்தியவர்கள் சோழ மன்னர்கள். நான் நேற்று மாலத்தீவிலிருந்து திரும்பியது ஒரு தற்செயல் நிகழ்வு. இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி.

பிரகதீஸ்வரரின் பாதங்களில் அமர்ந்து வணங்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. 140 கோடி இந்தியர்களின் நலனுக்காகவும், இந்தியாவின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காகவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலில் நான் பிரார்த்தனை செய்துள்ளேன். அனைவருக்கும் சிவபெருமானின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்.