டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள விமானம் நிலையம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றரை மணி நேரம் காத்திருப்புக்கு பிறகு, டெல்லி செல்லாமல் வீடு திரும்பியுள்ளார். 


சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர்மட்ட சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்றுகடந்த ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன்  3 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். 


அதன்படி தற்போது தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் கூடிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துமனையில் இதயம், சிறுநீரகம், மூளை நரம்பியல், இரத்தநாளங்கள், குடல் இரைப்பை,புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளது.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு ரூ.230 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் பணிகள் நிறைவடைந்துள்ளது. 


இதனிடையே தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில்  டெல்லி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  டெல்லி செல்லும் அவர், நாளை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.  இந்த சந்திப்பில் கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வகுக்குமாறு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளார் எனவும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  


இந்நிலையில் இரவு 7.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றடைந்தார். ஆனால் அங்கு அவர் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஒன்றரை மணி நேரம் காத்திருந்த பின் தன் பயணத்தை ஒத்திவைத்து விட்டு வீடு திரும்பினார். இதனிடையே  நாளை காலை 6 மணிக்கு மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.