ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிசந்திரன், நளினி ஆகிய ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்


அந்த கடிதத்தில், உச்சநீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலை தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையிலும் ஏற்கனவே ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தின் அடிப்படையிலும் எழுவரையும் விடுதலை செய்ய உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  வலியுறுத்தியுள்ளார்.



தமிழ்நாட்டில் உள்ள பெருவாரியான அரசியல் கட்சியினர் சிறையில் உள்ள இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 30 வருடங்களாக இவர்கள் சொல்லமுடியாத கஷ்டங்களையும், வேதனைகளையும் அனுபவித்து வருவதுடன், தங்கள் வாழ்வின் பெருவாரியான நாட்களை சிறையில் கழித்து மிகப்பெரிய விலையை இதற்காக கொடுத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். 




எனவே, தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, சிறையில் உள்ள இந்த ஏழு பேரையும் விடுதலை செய்தவற்கு உடனடியாக உத்தரவிடவேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.  இந்த கடிதத்தை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேரடியாக சென்று அளித்துள்ளார்.